அகரமுதலித் திட்டம்

பொன்மொழிகள்

ஆரியர் வருகைக்கு முற்பட்ட தனித்தமிழ் நூல்கள் அத்தனையும், முன்னைத் தமிழர் நாகரிகத்திற்குச் சான்றும் பின்னைத் தமிழர் முன்னேற்றத்திற்குத் துணையும் ஆகாதவாறு, அழிக்கப்பட்டு விட்டன.

தமிழக அரசின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்

        பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தைத் தமிழக அரசு உருவாக்க வேண்டுமென்ற நோக்கத்தில், பாவாணர்பால் பேரன்பு பூண்டவரும் தமிழ்ப் புலமை மிக்கவரும் தமிழ் வளர்ச்சி, திருக்குறள் தொண்டுகளில் தலைநின்றவருமான தவத்திரு குன்றக்குடி அடிகளார், பாவாணரின் தமிழ்ப் பெரும் பணிகளுக்கு அரசு உதவ வேண்டுமென விழைந்தார். தி.மு.க. அரசால் சட்டமன்ற மேலவை உறுப்பினராக அமர்த்தப் பெற்றிருந்த அடிகளார், வாய்ப்பு நேரும் போதெல்லாம், அன்றைய முதலமைச்சர் திரு. அருட்செல்வனாரிடம் (கருணாநிதியாரிடம்) பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலிப் பணியை அரசே யேற்க வேண்டுமென்று கூறி வந்தார்.

        2-12-1973 அன்று திருவாரூரில் திரு.வி.க. படிமத் திறப்புவிழாவிற்கு இயற்றமிழ் பயிற்றகச் சார்பாகப் புலவர் சரவணத் தமிழன் ஏற்பாடு செய்திருந்தார். தவத்திரு குன்றக்குடி அடிகளார் தலைமை தாங்கினார். பாவாணர் சிறப்புரையாற்றினார். அவ்விழாவில் அன்றைய முதலமைச்சர் திரு. அருட்செல்வனார் (கருணாநிதியார்) கலந்து கொண்டார். அவரிடம் பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியைப் பற்றி எடுத்துக் கூறப்பட்டது. பின்னர், முதலமைச்சர் உரையாற்றும்போது, “இந்த அரசு பாவாணர் அருந்தமிழ்ப் பணிக்கு - அகரமுதலிப் பணிக்கு உதவும்” என்று அறிவித்தார்.

        அதைத் தொடர்ந்து, 1974-ஆம் ஆண்டு ஆகத்து திங்கள் 5-ஆம் பக்கல் பாவாணர் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட இயக்குநராகத் தமிழக அரசால் பணியமர்த்தம் செய்யப்பட்டார். அதனால், பாவாணர் சென்னையிற் குடியேற வேண்டிய நிலையேற்பட்டது.

        பாவாணர் பல்வேறு இடங்களிற் பணியாற்றியும் வேவ்வேறு பதவிகளைத் தாங்கியிருந்தும் தமக்கென்று சொந்தமாக உறையுள் ஏதுமில்லை. அதற்குப் பொருள்நிலை சரியில்லாத நிலையோடு, அவர் தமது ஆய்விற்குத் தேவையான நூல்கள் அனைத்தையும் சொந்தச் செலவிலேயே வாங்கியதும் ஒரு கரணியம் என்று கூறலாம்.

        அந்நிலையில், அவர் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பொறுப்பேற்றதன் விளைவாகத் தமது ஊதியத்தைக் கொண்டு முதலமைச்சர் திரு. அருட்செல்வனார் (கருணாநிதியார்) பேருதவியால் 13,000/- உருபாவிற்கு ஒரு மனை நிலம் வாங்கவும் அதில் வீடு கட்டச் சிறிது சிறிதாகப் பணம் சேர்க்கவும் முடிந்தது. “இதுவரை தி.மு.க. (அருட்செல்வனார்) அரசு செய்துள்ள தொண்டுகளுள் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்ட உருவாக்கமே தலைசிறந்தது என்று” பாவாணர் பாராட்டினார்.

        அகரமுதலிப் பணியென்பது பிறப் பணிகளைப் போன்று எளிதான பணியன்று. மொழியியல் துறையில் ஆழ்ந்த அறிவாற்றலும் மிகுந்த பட்டறிவும் வேண்டும். பல்வேறு அகராதிகளை அலசிப் பார்த்திருக்க வேண்டும். அதற்குரிய முழுத் தகுதியும் ஒருங்கே பெற்றவர் பாவாணர் என்பதில் சிறிதும் ஐயமில்லை. பன்மொழி அகராதிகள், கலைக் களஞ்சியங்கள், திணை நூல்கள் இன்னும் ஆயிரக்கணக்கான நூல்களைத் தமது சொந்தச் செலவிலேயே வாங்கி, அவற்றையெல்லாம் படித்துக் கரை கண்டவர் பாவாணர். அரசு பாவாணரைச் சரியான வகையில் ஊக்குவித்திருந்தால், அவருடைய செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி முழுமை பெற்று இந்திய அகரமுதலிகளுக் கெல்லாம் ஒரு வழிகாட்டியாக அமைந்திருக்கும் என்பதில் கடுகளவும் ஐயத்திற்கு இடமில்லை.

        பாவாணரின் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்தை அரசு உருவாக்கினாலும், முறைப்படி அதில் அக்கறை காட்டவில்லை. அதற்கு அன்றைய கல்வியமைச்சாராயிருந்த திரு. நெடுஞ்செழியனாரின் முட்டுக்கட்டையே கரணியம். கடைசி வரை அவர் அகரமுதலித் திட்டப் பணிக்குப் பெருந்தடையாகவே இருந்தாரென்பது குறிப்பிடத்தக்கது. அதனால், பாவாணர் தமது பணியை முழுமையாக முடிக்க முடியாமலே போனது.