பொன்மொழிகள்

தமிழன் பிறந்தகமும் பழம் பாண்டிநாடும் தென்மாவாரியில் முழுகிப்போன பெருநிலமுமான குமரிக் கண்டத்தின் தென்கோடியடுத்து, பனிமலை (இமயம்) போலும் ஒரு மாபெரு மலைத்தொடர் இருந்தது. அதன் பெயர் குமரி. அதனாலேயே முழுகிப்போன நிலமும் குமரிக்கண்டம் எனப்பட்டது.

அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணி

        சென்னைப் பல்கலைக் கழகம் தமிழ்நாட்டுப் பல்கலைக் கழகமாயிருந்தும், அதில் தமிழ்மொழி சரியாய்ப் பேணவும் கவனிக்கவும் பெறாமையால், அங்குப் பணியாற்றப் பாவாணரே விரும்பவில்லை. அந்நிலையில் தமிழிலக்கியப் பண்பாட்டைத் தக்க முறையில் வளர்ப்பதையும் உலக முழுவதும் பரப்புவதையுமே சிறந்த குறிக்கோளாகக் கொண்ட அண்ணாமலைப் பல்கலைக் கழகம் காலஞ்சென்ற அரசவயவர் அண்ணாமலைச் செட்டியார் அவர்களின் அரும்பெரு முயற்சியால் 1929-ஆம் ஆண்டு தோற்றுவிக்கப் பெற்றதாயினும், கால் நூற்றாண்டிற்கு மேலாக அது பாவாணர்க்கு அண்ணா மலையாகவே யிருந்தது.

        அப்பல்கலைக்கழகத்திற் தமிழாராய்ச்சித் துறை ஏற்படுத்தப்பட்டபோது, பல்கலைக் கழகத் துணைவேந்தராயிருந்த முனைவர் மணவாள இராமாநுசம் அவர்கள் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற்கு வருமாறு பாவாணர்க்கு ஓர் அழைப்பு விடுத்தார். அதில் சேலம் நகராட்சிக் கல்லூரியிற் பெறும் சம்பளத்திற்கு மேல் தருவதாகவும் ஈராண்டு கூடுதலாகப் பணி இருக்குமென்றும் கூறியிருந்தார். அன்றைய நிலையில் பாவாணர்க்கு அப்பல்கலைக் கழகத்திற்குச் செல்வது ஏற்றதாயிருந்ததேனும், பிற்காலத்தில் வடமொழி வெறியர் எவரேனும் பல்கலைக் கழகத் துணைவேந்தராக வர நேர்ந்து விட்டால், அப்பதவியை இழக்கக் கூடுமென்றெண்ணி, அப்பதவியை யேற்க மறுத்துவிட்டார் பாவாணர்.

        அவர் அஞ்சியவாறே பிற்காலத்தில் நேரவும் செய்தது. ஆயினும், ஒரு பல்கலைக் கழகத்திற்குச் செல்லும் அளவிற்குத் தம்முடைய நிலை உயர்ந்ததைக் கண்டுப் பாவாணர் பெரிதும் மகிழ்ந்தார். அதற்குக் கரணியமாக இருந்த சேலம் கல்லூரி முதல்வர் பேரா. இராமசாமிக் கவுண்டரையும் பாராட்டினார்.

        அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் 1956-ஆம் ஆண்டு சூன் திங்கள் மொழியாராய்ச்சித் துறை யேற்படுத்தப்படுமென்றும், அதற்குத் துணைப் பேராசிரியர் முதலில் அமர்த்தப் பெறுவரென்றும் முதற்கண் ‘தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலி’ (அகராதி) தொகுப்புப் பணி மேற்கொள்ளப்படு மென்றும் செய்தித் தாள்களில் விளம்பரம் வெளியானது. அவ்விளம்பரம் பாவாணர் உள்ளத்தை மிகவும் கவர்ந்தது. மேலும், தமிழ்வேர்ச் சொல் அகரமுதலிப் பணியை தம்மையன்றி வேறெவராலும் தொகுக்கவியலாது என்று எண்ணிதாலும், முதலில் துணைப் பேராசிரியராகச் சேர்ந்தாலும், நாளடைவில் பேராசிரியர் பதவிக்கு உயரலாமென்று நம்பியதாலும், பாவாணர் அப்பதவிக்கு வேண்டுகோள் விடுக்க விரும்பினார். நூல்கள் வாங்குவதற்கே அவர் பயன்படுத்தினார்.

        அந்நிலையில், சேலம் கல்லூரியில் பேரா. இராமசாமிக் கவுண்டர் அவர்கள் பெயரால் கட்டப்பட்ட மாணவர் விடுதியைத் திறந்து வைக்க அண்ணாமலைப் பல்கலைக் கழக இணைவேந்தர் அரசவயவர் முத்தையாச் செட்டியார் அவர்கள் சேலம் வந்திருந்தார்கள். அவ்வமயம் கல்லூரி முதல்வர் பேரா. அச்சுத நாயர் அவர்களும், பேரா. சொக்கப்பா அவர்களும், பேரா. கோவிந்தராசன் அவர்களும் பாவாணர் தகுதியைப் பற்றி அரசவயவர் முத்தையாச் செட்டியார் அவர்களிடம் சிறப்பாக எடுத்துரைத்தனர். உடனே திரு. முத்தையாச் செட்டியார் அவர்களும் பாவாணரிடம் வேண்டுகோள் விடுக்கச் சொன்னதுமன்றி, பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவிற்கும் அவரைச் சிறப்பு விருந்தினராக வரவழைத்தார்.

        அதைத் தொடர்ந்து, மதுரை தியாகராசர் கல்லூரித் தலைமைப் பேராசிரியர் முனைவர் அரசமாணிக்கனாரும், துணைத் தமிழ்ப் பேராசிரியர் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளை அவர்களும் பாவாணருக்காகப் பல்கலைக் கழக இணைவேந்தர்க்கும் துணைவேந்தர்க்கும் பரிந்துரை செய்தனர். ஆயினும், பாவாணர் அண்ணாமலைப் பல்கலைக் கழகப் பட்டமளிப்பு விழாவிற்குச் சென்றிருந்தபோது, துணைவேந்தர் திரு. டி.எம். நாராயணசாமிப் பிள்ளை அவர்கள், “உங்களைப் பற்றி அரசமாணிக்கனாரும் அவ்வை சு. துரைசாமிப் பிள்ளையும் எழுதியிருந்தார்கள். ஆனால், எனக்கென்ன தமிழ் தெரியும்? இரா.பி. சேதுப்பிள்ளையும் தெ.பொ. மீனாட்சி சுந்தரம் பிள்ளையும் இருக்கிறார்கள். அவர்கள்தான் கவனிக்க வேண்டும்" என்று சொல்லியிருக்கிறார். அதினின்று பாவாணர் அப்பதவி தமக்குக் கிடைக்க வாய்ப்பில்லையென உய்த்துணர்ந்து கொண்டார். அவர் எண்ணியவாறே ஆயிற்று. அதற்குப் பேரா. சேதுப்பிள்ளை பாவாணர் மீதும் தனித்தமிழ் மீதும் பற்றற்றவராக இருந்தமையும் அண்ணாமலை நகரில் நடைபெற்ற கீழைக்கலை (Oriental Language) மாநாட்டில் பேரா. தெ.பொ.மீ.யோடு பாவாணர்க்கு ஏற்பட்ட கருத்து வேற்றுமையுமே பெருந்தடையாக இருந்ததெனப் பிறர் சொல்லக் கேள்வி. வேண்டுகோள் விடுத்து அரையாண்டாயினும் பதவியில் அமர்த்துவதற்கான ஆணை வந்தபாடில்லை.

        இதற்கிடையில், முத்தமிழ்க் காவலர் கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் சென்றவிடமெங்கும் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பிற்குப் பாவாணரே தக்கவரென்றும் அவர் மட்டுமே அப்பணியைச் செய்யவியலும் என்றும் பேசி வந்தார். ஆயினும், பேரா. சேதுப்பிள்ளையின் போக்கைத் துணைவேந்தர் திரு. நாராயணசாமிப் பிள்ளை மீற விரும்பவில்லை. இந்நிலையில், பண்டகர் வரதராசலு அவர்கள் சேலத்திலுள்ள பண்டகர் இராசாராம் அவர்களின் வளமனைக்கு வந்து விருந்தினராகத் தங்கினார். அப்போது, பண்டகர் இராசாராம் பாவாணர் நிலையைப் பற்றியும் அண்ணாமலைப் பல்கலைக்கழகப் பணியைப் பற்றியும் பண்டகர் வரதராசலுவிடம் எடுத்துரைத்தார். அவரும் சென்னைக்குச் சென்றவுடன், பாவாணர்க்கு ஆவன செய்வதாகக் கூறினார். அவ்வாறே அவர் சென்னைக்குச் சென்றவுடன், அரசவயவர் முத்தையாச் செட்டியார் அவர்களிடமிருந்து பாவாணர்க்கு மடல் வந்தது. அதிலிருந்து அண்ணாமலைப் பல்கலைக் கழக வேலை தமக்கு நெருங்கிவிட்டதாகப் பாவாணர் உய்த்துணர்ந்து கொண்டார்.

        அரசவயவர் முத்தையாச் செட்டியாரும் தம் தந்தையார் அரசவயவர் அண்ணாமலைச் செட்டியார் போன்றே தமிழ்ப்பற்று நிரம்பியவராயினும் முனைவர் இரா.பி. சேதுப்பிள்ளையும் பேரா. தெ.பொ.மீ.யும் வேறொரு பிராமணப் பேராசிரியரும் முத்தமிழ் வேங்கையரென்றும் கருதப்பட்டதாலும், துணைவேந்தர் திரு. டி.எம். நாராயணசாமிப் பிள்ளையின் அதிகார உரிமை மதிக்கப்பட வேண்டியிருந்ததாலும் பாவாணர் உடனடியாகப் பல்கலைக் கழகத்தில் அமர்த்தப்படவில்லை. அதேசமயம், சாய்காலமிக்க பலருடைய பரிந்துரைகளையும் அரசவயவர் முத்தையாச் செட்டியார் அவர்கள் பொருட்படுத்தாமல் இருக்கவும் இயலவில்லை.

        இந்நிலையில், அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற் கீழைக் கலைத்துறைத் தலைவரும் அருந்தமிழ் அன்பருமான பேரா. இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியாரின் கருத்தை அரசவயவர் முத்தையாச் செட்டியார் கேட்டிருக்கின்றார். அவரும் சிறப்பாகப் பரிந்துரைக்கவே அரசவயவரின் தடுமாற்றம் நீங்கிற்று. அதன்பின், பல்கலைக்கழகத் துணைவேந்தரை இசைய வைப்பது செட்டியார்க்கு எளிதாயிற்று. நீண்ட நாளாக ஒன்றும் தெரியாத நிலையில் ஒருநாள் துணைவேந்தரிடமிருந்து பாவாணர்க்கு அமர்த்தோலை வந்தது. அவரும் அதை ஓரளவு பசியடங்கியவனுக்குக் கிடைத்த உணவு போலப் பெற்றுக் கொண்டார்.

        அமர்த்தோலை வந்து இருநாள் சென்றபின், அதன் தொடர்ச்சியாக மற்றோர் ஓலையும் வந்தது. அதில் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் பாவாணர் பணியை மேற்பார்வையிட ஒன்பதின்மர் கொண்ட குழு ஒன்று ஏற்படுத்தப்பட்டு இருந்தமை தெரிய வந்தது. அக்குழுவினர் கீழ்வருமாறு:

  1. வங்கச் சட்டமன்றத் தலைவரும் ஓய்வு பெற்ற வடமொழிப் பேராசிரியருமான முனைவர் சு. நீதிக்குமார் சட்டர்சி (தலைவர்).
  2. பூனாப் பட்டக்கல்வி ஆசிரியப் பயிற்சியாராய்ச்சித் தக்கணக் கல்லூரித் தலைவர் முனைவர் கத்தரே.
  3. மைசூர்ப் பல்கலைக்கழகக் கன்னடத் துறைத் தலைவர் பேரா. சீகண்டையா.
  4. சென்னைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேரா. இரா.பி. சேதுப்பிள்ளை.
  5. சென்னை மாநிலக் கல்லூரி ஓய்வு பெற்ற தலைமைத் தமிழ்ப் பேராசிரியர் தெ.பொ. மீனாட்சிசுந்தரம்.
  6. சென்னை மாநிலக் கல்லூரி வடமொழிப் பேராசிரியர் திரு. ஞானசம்பந்தம்.
  7. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்க் கீழைக்கலைத் துறைத் தலைவர் பேராசிரியர் இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார்.
  8. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழ்த் துறைத் தலைவர் பேராசிரியர் அ. சிதம்பரநாதன் செட்டியார்.
  9. அண்ணாமலைப் பல்கலைக்கழகத் தமிழாராய்ச்சித் துறைத் தலைவர் பேராசிரியர் கோ. சுப்பிரமணியம்.

        அவ்வேற்பாட்டைப் பாவாணர் எள்ளளவும் எதிர்பார்க்கவே யில்லை. அக்குழுவிற் பாவாணரைப் போலத் தமிழாராய்ந்தவரும், அவர் பணியை மேற்பார்க்கத் தக்கவரும் ஒருவருமிலர். ஆயினும், பாவாணர்க்கும் தமிழுக்கும் மாறான ஒருவராலோ மூவராலோ ஏற்படுத்தப்பட்ட சூழ்ச்சியே அது என்பது திண்ணம். மேலும், பாவாணரை அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தினின்றும் விரைந்து வெளியேற்றவே அந்த ஏற்பாடு என்பதும் தெள்ளத் தெளிவாயிற்று.

        அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற் தமிழாராய்ச்சியாளரா யிருந்த பேரா. இரா. இராகவையங்காரும் வடமொழிப் பேராசிரியராயிருந்த முனைவர் சுப்பிரமணிய சாத்திரியாரும் பாவாணர் எழுதியுள்ள நூல்களில் உண்மைக்கு மாறாகத் தமிழை எத்துணையோ ஆழ்த்தியும் தாழ்த்தியும் கூறியுள்ளனர். ஆயினும், அவர்களைத் தடுக்கவோ விடுக்கவோ எத்தமிழ்ப் பேராசிரியர்க்கும் எள்ளளவும் துணிவில்லாமற் போயிற்று. அன்றைய நிலையில் முப்பதாண்டாக இரவும் பகலும் அரும்பாடுபட்டு, தமிழை யாராய்ந்து உள்ளபடி கூறிய பாவாணர்க்கோ இல்வாழ்க்கையும் இடர்ப்படும்படி, தமிழரே அதுவும் தமிழ்ப் பேராசிரியரே முட்டுகட்டையா யிருந்துள்ளனர்.

        "ஆங்கிலக் கல்வியும் அறிவியலாராய்ச்சியும் மிக்க இவ்விருபதாம் நூற்றாண்டிலும் பல்கலைக்கழகத் தலைமைத் தமிழ்ப் பேராசிரியன்மார் தமிழைக் காட்டிக் கொடுத்தும் பட்டமும் பதவியும், பெயரும் புகழும், பாராட்டும் பரிசும் பெறுவாராயின், பிராமணர் நிலத்தேவரென்றும் அவர் முன்னோர் மொழி தேவமொழி யென்றும் முற்றும் நம்பப்பட்டிருந்த பண்டைய காலத்திற் தமிழ் நிலையும் தமிழன் நிலையும் தன்மானத் தமிழ்ப் புலவர் நிலையும் எத்துணை தாழ்ந்து இருந்திருக்கும் என்பதையும் சற்றேனும் பகுத்தறிவாளர் உய்த்துணரலாம்" என்று பாவாணர் உரைக்கிறார்.

        முனைவர் சட்டர்சி தமிழை நேர்வழியிற் கல்லாது, தமிழைப் பிறழவுணர்ந்த அல்லது திரித்துக் கூறுகின்ற பிராமணப் பேராசிரியர் எழுதிய ஆங்கில நூல் வாயிலாகக் கற்ற ஒரு வங்காளப் பிராமணர். அவர் தமிழறிவு எத்தகையதென்பதை எண்ணிப் பார்ப்போர்க்கு நன்கு விளங்கும். அடுத்து, முனைவர் கத்தரே ஒரு வடமொழி வெறியரான கொங்குனிப் பிராமணர். தமிழின் பெருமையையும் தொன்மையையும் சற்றும் அறியாதவர். பேரா. சீகண்டையா ஒரு கன்னடப் பிராமணர். இவரேனும் ஒரு திராவிட மொழிப் புலவரெனக் கொள்ளலாம். பாவாணரின் திராவிட மொழியாராய்ச்சித் துறையோடு தொடர்புடையவரென்றும் கருதலாம். ஆனால், வங்கத்திலும் வடமொழியிலும் வல்லுனரான சட்டர்சிக்கும் கொங்குனியிலும் வடமொழியிலும் புலவரான கத்தரேக்கும் தமிழோடு என்ன தொடர்பு இருக்க முடியுமென வினவுகிறார் பாவாணர். ஆரிய மொழிகளுக்குள் மட்டுமின்றி, இந்திய மொழிகளுக்குள்ளும் வடமொழியைத் தலைமையாகக் கொண்ட இவ்விருவரோடும் தமிழைத் தலைமையாகக் கொண்ட பாவாணர் விரைவில் முட்டுவாரென்றும் அவர் பணி தடைபடுமென்றும் எண்ணியே சூழ்ச்சியாளர் அவ்விருவரையும் பாவாணர் ஆராய்ச்சிப் பணிக்கு மேற்பார்வைக் குழுத் தலைவராகவும், துணைத் தலைவராகவும் அமர்த்தினர். அவர்கள் எதிர்பார்ப்பும் விரைவில் நிறைவேறுமெனப் பாவாணர் அறிந்திருந்தார்.

        இந்நிலையில், அண்ணாமலைநகர் செல்வதா வேண்டாமா என்ற எண்ணம் பாவாணர் உள்ளத்திற் தோன்றியது. ஆயினும், அவர் நண்பரெல்லாம் அண்ணாமலைநகர் செல்வது நல்லது என்று வற்புறுத்தினர். அப்போது, பாவாணர்க்கு 54 அகவை. அவர் சேலம் கல்லூரியிலேயே இருந்தால், அடுத்த ஆண்டு ஓய்வு பெற வேண்டிய நிலை இருந்தது. ஒருவேளை, அதற்குமேல் ஓராண்டு வேண்டுமானால் நீட்டிப்பு கிடைக்கலாம். அதற்குமேல் சேலம் கல்லூரியில் இருத்தல் இயலாது. அண்ணாமலை நகர் சென்றால், ஐந்தாண்டு அலுவல் இருக்கும். அதற்குள் தமிழ் வேர்ச்சொல் அகரமுதலியை ஒருவாறு தொகுத்து விடலாம். அதற்கு மேல் வேலை இருப்பினும் சரி, இல்லாவிடினம் சரி என்ரெண்ணி அங்குச் செல்லத் துணிந்தார் பாவாணர்.

        அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலையமர்த்தம் ஒருவாறு நிறைவேறியது. பல்கலைக் கழக வேலையமர்த்தம் கல்வியாண்டு தொடங்கியபின் ஆனதினால், பள்ளிகளிற் படித்துக் கொண்டிருந்த எங்களை உடன் கூட்டிச் செல்ல இயலாமல், எங்கள் தந்தையார் (பாவாணர்) தனித்தே அண்ணாமலைநகர் செல்ல நேர்ந்தது. சேலம் கல்லூரியினின்று விடுவிப்புப் பெற சின்னாட் செல்ல நேர்ந்ததால், அண்ணாமலைப் பல்கலைக்கழக வேலையை 12.7.1956 அன்றுதான் ஒப்புக் கொள்ள இயன்றது.

        அண்ணாமலைநகர் சென்ற பிறகும் பல்கலைக் கழக வீடு பாவாணர்க்கு உடனடியாக ஒதுக்கப்படவில்லை. அது கிடைக்கும் வாய்ப்பு பேராசிரியர், துணைப் பேராசிரியர், விரிவுரையாளர் ஆகிய முத்திறத்தார்க்கும் முறையே தலை, இடை, கடையாம். எனினும், துணைவேந்தர் திரு. நாராயணசாமியாரின் கண்ணோட்டத்தாலும் பதிவாளர் மீனாட்சிசுந்தரனார் அன்பாலும் விருந்தினர் விடுதியில் பாவாணர்க்கு ஏந்தான ஓர் அறை கிடைத்தது. அதையடுத்து, ஒரு கிழமைக்குள் கொற்றவன்குடி விரிவுரையாளர் குடியிருப்பு வரிசையில் 7-ஆம் எண் உறையுள் ஒதுக்கப்பட்டது. நாங்கள் எல்லோரும் சேலத்திலேயே இருந்ததால், பாவாணர் ஓராண்டு தனித்திருக்கவே நேர்ந்தது. உண்டிச்சாலை உணவு அவர்க்கு ஏற்காததால், மும்மாதம் தாமே சமைத்துக் கொண்டார். அதனால், முழு நேரமும் பல்கலைக் கழகப் பணிக்குச் செலவிட முடியாமற் போனது. எனவே, பாவாணர் தமது மூன்றாவது மகன் அடியார்க்கு நல்லானைத் (என் அண்ணன்) தமக்குத் துணையாக இருக்கும்படி அழைத்துச் சென்றார்.

        இந்நிலையில் 12.9.1956 அன்று துணைவேந்தரிடமிருந்து ஓர் ஓலை வந்தது. அதன் உள்ளடக்கம் (மொழிபெயர்ப்பு) கீழ்வருமாறு:

        "இப்பல்கலைக் கழகத்திற்குப் புதிதாய் ஏற்பட்டுள்ள ஒப்பியல் மொழித் துறையைச் சேர்ந்த வாசகர்க்கு (Reader) அறிவுரை கூறவும் வழிகாட்டவும் அவர் பணியைப் பற்றி வினவவும் ஒரு திறவோர் குழு இப்பல்கலைக் கழகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. அக்குழுத் தலைவர் காளிக்கோட்ட மேலை வங்கச் சட்டமன்றத் தலைவர் முனைவர் எசு.கே. சட்டர்சி. இப்பல்கலைக் கழக ஒப்பியல் மொழித்துறை வாசகரான திரு. ஞா. தேவநேயப் பாவாணர் அக்குழுவின் உறுப்பினரும் செயலாளருமாவார். குழுவுறுப்பினர் பன்னிரவர். நீர் இக்குழுவில் உறுப்பினராயிருக்க ஒப்புதலளித்து, இப்புதுத் துறைப் பணிக்கு உம் அரிய பட்டறிவைக் கொண்டு உதவி நலம் புரியுமாறு உம்மை வேண்டுகிறேன். இக்குழு சென்னையிலாவது, அண்ணாமலைநகரிலாவது தேவைக்கேற்ப அடிக்கடி கூடும். அக்கூட்டங்கட்கு நீர் செல்வதற்கு இப்பல்கலைக் கழக நெறிப்படி உமக்கு வழிச்செலவுப்படி தரப்படும். குழுவில் உம் உறுப்பான்மையைக் கூடிய விரைவில் ஏற்றுதவுமாறு வேண்டிக் கொள்கிறேன்."

        இங்ஙனம் அம்மடலில் பாவாணர் இசைவை வேண்டுவதுபோல் எழுதப்பட்டிருந்ததேனும், எல்லாத் திட்டங்களும் அமைப்புகளும் பாவாணர் அதிகாரத்திற்கு அப்பாற்பட்டவையே என்றும், அவற்றிற்கெல்லாம் வினை முதல்கள் அண்ணாமலைப் பல்கலைக்கழக மொழிநூல் துறையை அரக்கர்போல் ஆட்டி வைக்கும் இரு தமிழ்ப் பேராசிரியரே என்றும் உணர்ந்து கொண்டார் பாவாணர். ஆதலால் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்திற் பணியாற்ற வேண்டுமாயின், ஆரியத் தலைமையேற்றுத் தமிழைக் காட்டிக் கொடுத்தல் தவிர மற்றெல்லா நிலைப்பாடுகட்கும் இணங்கியே ஆகவேண்டும் என்னும் முடிவிற்கு வந்துவிட்டார் பாவாணர்.

        குழுவுறுப்பினர் பன்னிருவருட் பெரும்பாலார் ஆரியச் சார்பாயிருத்தலின், முனைவர் அரசமாணிக்கனாரையும், முனைவர் மு. வரதராசனாரையும் உறுப்பினராகச் சேர்த்துக் கொள்ளுமாறு துணைவேந்தரை வேண்டினார் பாவாணர். ஆனால், பாவாணர் எதிர்பார்ப்பு நிறைவேறவில்லை. ஆரியம் அத்துணை ஓங்கியிருந்தது.

        மொழிநூல் துறையின் முதற்பணி தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பென்று விளம்பரஞ் செய்யப்பட்டிருந்ததேனும், குழு ஆற்றுப்படுத்தியவாறே பாவாணர் பணி நடைபெறல் வேண்டுமென்று அமர்த்தோலைப் பின்னிணைப்பிற் குறிப்பிட்டிருந்ததால், குழு கூடும் வரை அப்பணியில் ஈடுபடப் பாவாணரால் இயலவில்லை. ஆராய்ச்சித் துறைக் கூடத்தில் மொழிநூல் துறைக்கு ஒதுக்கப்பட்டிருந்த இடமும் ஒரு நாற்காலியும் ஒரு நிலை மேடையும் (மேசையும்) தவிர வேறொன்று மில்லாமலும், ஒரு நீண்ட கூடம் மறைப்பின்றியும் இருந்தது.

        பல நாட் சென்றபின் 8-4-1956 அன்று அண்ணாமலைப் பல்கலைக் கழக திராவிட மொழிநூல் துறைத் தொடக்கக் கூட்டம் நடைபெற்றது. பேரா. தெ.பொ. மீனாட்சி சுந்தரனார் தவிர உறுப்பினர் அனைவரும் சென்றுள்ளனர். தலைவர் முனைவர் சட்டர்சி விரிவான தலைமையுரை யொன்று நிகழ்த்தினார். கூட்டம் முழுவதும் ஆங்கிலத்திலேயே நடைபெற்றது. செயலாளர் என்ற முறையில் பாவாணர் ஓர் அறிக்கையை யெழுதிப் படித்தார். தலைவர் தம் உரையிடையே, “ஒவ்வொரு நாட்டிலும் நாகரிகம் அந்நாட்டு மொழியோடு தொடர்புள்ளது. இந்திய நாகரிகமெல்லாம் வடமொழி இலக்கியத்திலேயே எழுதப்பட்டுள்ளது. ஆதலால், இந்திய நாகரிகம் ஆரியரதே” என்று கூறியதால், பாவாணர் தம் அறிக்கையை யொட்டி, "இந்திய நாகரிகமெல்லாம் முதன்முதலில் தமிழிலக்கியத்திலேயே எழுதப்பட்டிருந்தது. அவ்விலக்கியம் முழுவதும் இறந்துபட்டபின், அதன் மொழிபெயர்ப்பான வடமொழி இலக்கியமே மூலம் போற்காட்சியளிக்கின்றது. “தொடர் வண்டியில் செல்வோன் ஒருவன் கையில் வழிப்போக்குச் சீட்டு இல்லாவிடின், அம்மட்டிலேயே அவன் சீட்டு வாங்காமற் செல்பவன் என்ற முடிவிற்கு வந்துவிட முடியாது. ஒருகால் சீட்டு தவறிப் போயிருக்கலாம்; அல்லது அடுத்தவன் சீட்டைத் திருடியிருக்கலாம்” என்றுரைத்துத் தலைவர் கூற்றை மறுத்துப் பேசினார்.

        முனைவர் சட்டர்சிக்குத் தமிழ் தெரியாது. அதிற் பேசவோ எழுதவோ இயலாது. தமிழைப் பற்றி ஆங்கில நூல் வாயிலாகவே கற்றவர். சுநீதிகுமார் சட்டர்ஜி என்னும் தம் பெயரின் முன்னிரு சொற்களை மட்டும் ‘நன்னெறி முருகன்’ என்று மொழிபெயர்த்து, அவற்றைத் தமிழ் எழுத்தில் குறிக்கக் கற்றிருந்தார்.

        முனைவர் சட்டர்சியின் தலைமையுரைக் கருத்துக்களைக் காணின், நீலகண்ட சாஸ்திரியார், “தமிழ் வரலாறும் பண்பாடும்” என்னும் நூலில் தமிழைத் தாழ்த்தி கூறியிருப்பது புதுமையாகத் தோன்றாது. ஆயினும், பாவாணர் ஒருவரைத் தவிர வேறொருவரும் அவற்றை எதிர்க்கவில்லை.

        முனைவர் சட்டர்சியின் கட்டுரைப் படிகள் சிலவற்றைப் பெற்றுத் தமிழ்ப் பற்றுள்ள தமிழ்ப் புலவர் சிலரிடமும் தமிழன்பர் சிலரிடமும் காட்டினார் பாவாணர். அவருட் சிலர் வருந்தினர். பலர் அதுபற்றிக் கருத்துக் கூறாமல் இருந்தனர். சில மாதம் சென்ற பின் முனைவர் சட்டர்சி அண்ணாமலை நகர் வந்து, பாவாணர் தொகுக்கவிருந்த செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலியின் போலிகையான ஐம்பான் சொல் விளக்கச் சுவடியைப் பார்வையிட்டார். எடுத்த அடியிலேயே தமிழர் குமரிக் கண்டத்தினின்று வந்தவரென்னும் உண்மை வரலாற்றுக் கூற்றையும் ‘அச்சன்’ என்பது ‘அத்தன்’ என்னும் தென் சொல்லின் திரிபென்னும் சொல் வரலாற்றையும் ஒப்புக் கொள்ள மறுத்த அவர், பாவாணரைப் பார்த்து, “நீ தன்னந்தனியாக போர் புரிகிறாய்” (You are fighting a lonely fight) என்று கூறியுள்ளார்.

        முனைவர் சட்டர்சிக்கு எத்துணைச் சான்று காட்டினும் அவற்றை யேற்கும் நடுநிலை அவர்க்கில்லை யென்பது பாவாணர்க்குத் தெரிந்து விட்டது. பேரா. இலெ.ப.கரு. இராமநாதன் செட்டியார் அவர்கள் பாவாணர்பால் கொண்டிருந்த அன்பால், முனைவர் சட்டர்சிக்குக் காட்ட வேண்டிய போலிகைச் சொற்பட்டியில் எள்ளளவும் கருத்து வேறுபாட்டிற்கும் ஐயுறவிற்கும் மறுப்பிற்கும் தர்க்கத்திற்கும் இடம் தராத ஐம்பது சொற்களையே சேர்க்கும்படி பாவாணர்க்கு அறிவுரை கூறினர். ஆயினும், பாவாணர் அதை யேற்க மறுத்துவிட்டார். “தமிழைப் பற்றிய உண்மையை எடுத்துச் சொல்ல ஏன் அஞ்ச வேண்டும்? ஆரியச் சார்பினர் கருங்காக்கையை வெண்காக்கை யென்று சொல்லத் துணியும்போது, எத்தனை நாளைக்கு அஞ்சி அஞ்சி அடிமைத் தனத்திலும் அறியாமையிலும் தமிழன் மூழ்கிக் கிடப்பது” என்று வினவினார் பாவாணர்.

        "ஓர் உண்மையான ஆராய்ச்சியாளன் ஒரு நாளும் ஆராயாதிருக்க முடியாது. அவன் ஆராயாவிடினும், அவன் உள்ளம் ஆராயும். அதற்குக் கனவென்றும் நனவென்றும் ஊண் வேளையென்றும் உறக்க வேளையென்றும் இல்லை. சொல்லாராய்ச்சியும் மொழியாராய்ச்சியும் எனக்கு இயல்பாக இன்பம் தரும் கலைகள்” என்றுரைக்கின்றார் பாவாணர். அவ்வாராய்ச்சித் தொடர்பாகச் சென்னைப் பல்கலைக் கழகத் தமிழ் அகரமுதலியில் இல்லாத ஆயிரக்கணக்கானச் சொற்களை இருவகை வழக்கினின்றும் அவர் தொகுத்து வைத்தார். பாவாணர்க்கு வேலை நாள், விடுமுறை நாள் இரண்டுமே ஒன்றுதான். எல்லா நாட்களிலும் ஓய்வின்று ஆராய்ச்சி செய்து கொண்டே இருப்பார்.

        பாவாணர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் அமர்த்தப் பெற்றது செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் தொகுப்பிற்கே. ஆனால், பேரா. சேதுப்பிள்ளை, பேரா. மீனாட்சி சுந்தரனார் போன்ற தமிழைக் காட்டிக் கொடுப்போராலும், தமிழ்ப் பகைவராலும் அவ்வேலை பாவாணரால் செய்ய முடியாமல் முற்றும் தடைபட்டுப் போனது. ஆகவே, ஆரிய ஏமாற்றம் அடியோடொழிந்தாலொழியத் தமிழுக்கு இனி நற்காலமில்லை யென்பதை நன்கு உணர்ந்து கொண்டார் பாவாணர்.

        பாவாணர் அண்ணாமலை நகர் சென்று ஐந்தாண்டு காலம் முடிந்தது. ஆறாம் கல்வியாண்டுத் தொடக்கத்தில் துணைவேந்தர் மாறினார். புதிதாய் வந்தவர்க்குத் தமிழ்ப் பற்று சிறிதுமில்லை. பேராசிரியன்மார் பெருமையுணரும் திறமுமில்லை. அதை நன்கு பயன்படுத்திக் கொண்ட தமிழ்ப் பகைவரும் தந்நலக்காரரும் கூடித் தமிழுக்குக் கேடு செய்துவிட்டனர். திடுமென்று பாவாணர்க்கு வேலை நீங்கியதாக ஓலை வந்தது. இலக்கணப் புலமையில்லாத முனைவர் சேதுப்பிள்ளையின் திட்டமே இறுதியில் மேற்கொண்டது.

  "செத்துங் கொடுத்தான் சீதக்காதி செத்துங் கெடுத்தார் சேதுப் புலவர்" என்று மனம் வெதும்பினார் பாவாணர்.

        "ஆண்டி எப்போது சாவான்; மடம் எப்போது ஒழியும்" என்று பாவாணர் பதவிக்கும் உறையுட்கும் நீண்ட நாள் காத்திருந்தனர் பலர். முறைப்படி மும்மாத அறிவிப்பு கொடுத்தல் வேண்டும். அதையும் பல்கலைக் கழகத்தார் பாவாணர்க்குக் கொடுத்திலர். அப்போது, எனக்கு வறுமையும் உண்டு; மனைவி மக்களும் உண்டு; அவற்றோடு மானமும் உண்டு என்று கூறிய பாவாணர் 1961-ஆம் ஆண்டு செபுத்தம்பர் மாதம் 23-ஆம் பக்கல் அண்ணாமலை நகரை விட்டு வெளியேறினார். அவரோடு தமிழும் வெளியேறியது.

        அண்ணாமலைப் பல்கலைக் கழகத்திற் பாவாணர் பணி நலம் பாராட்டிய பாவேந்தர் பாவாணர்க்குப் பதிகம் பாடினார்.

  "நாவலந் தீவுக்கு நந்தமிழே தாயென்று
  கூவும் அதுவுமோர் குற்றமா? - பாவிகளே
  தேவநே யர்க்குச் செயுந்தீமை செந்தமிழர்
  யாவர்க்கும் செய்வதே யாம்"

என்று ‘குயில்’ இதழில் எழுதினார்.