பொன்மொழிகள்

நாகரிகம் என்பது திருந்திய வாழ்க்கை. அது எல்லாப் பொருள்களையும் தமக்கே பயன்படுத்துவது. பண்பாடு என்பது திருந்திய ஒழுக்கம். அது எல்லாப் பொருள்களையும் தமக்கும் பிறர்க்கும் பயன்படுத்துவது.

காட்டுப்பாடி வாழ்க்கை

        பாவாணரின் அண்ணாமலை வாழ்க்கை ஒரு வழியாக முடிவுக்கு வந்துவிட்டது. அடுத்து, தமக்கும் தம் குடும்பத்தினர்க்கும் ஒரு நிலையான இருப்பிடம் தேவைப்பட்டது. பாவாணர் அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தில் இருந்தபோது, முத்தமிழ்க் காவலர் திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கள் பாவாணரிடம், ‘‘நீங்கள் பல்கலைக் கழகத்தினின்று ஓய்வு பெறும் வேளையில் குடும்பத்துடன் திருச்சிக்கு வந்து விடலாமென்றும் தம்முடைய தென்னந்தோப்பு இல்லத்திற் குடியிருக்கலாமென்றும்” கூறியிருந்தார். அதை முற்றும் நம்பியிருந்த பாவாணர், பல்கலைக் கழகத்தினின்று ஓய்வு பெற்றவுடன், அதன் தொடர்பாகத் திரு. கி.ஆ.பெ. விசுவநாதம் அவர்கட்கு மடல் ஒன்று விடுத்தார். ஆனால், அதற்கோ கடைசிவரை மறுமொழியில்லை.

        அடுத்து, பாவாணர் தாம் ஏற்கனவே நீண்ட காலம் பணியாற்றிய ஊரான சேலத்திற்குச் செல்லத் திட்டமிட்டு, அதற்கான ஏற்பாடுகளைச் செய்தார். அச்சூழலில் வடார்க்காடு மாவட்டம் வேலூரில் வாழ்ந்து வந்த தூயதமிழ்க் காவலர் திரு. கு.மு. அண்ணல்தங்கோ அவர்கள் ஆண்டுதோறும் நடத்தி வந்த ‘தமிழ்ச் சான்றோர் மாநாடு’ நடைபெற்றுக் கொண்டிருந்தது. அம்மாநாட்டிற்குப் பாவாணர் ஆண்டுதோறும் சிறப்புப் பேச்சாளராக அழைக்கப்படுவது வழக்கம். அவ்வாறு பாவாணர் வேலூர் மாநாட்டிற்குச் சென்றிருந்த வேளையில், திரு. கு.மு. அண்ணல்தங்கோ வாயிலாக ஏற்கனவே தமக்கு அறிமுகமான பேரியங்கி உரிமையாளர் (Bus Owner) திரு. உலகண்ணல் என்பவரைக் காண நேர்ந்தது.

        திரு. உலகண்ணல் என்பவரின் இயற்பெயர் செகந்நாதன். அவர் ‘இலக்குமி சரசுவதி’ என்ற பெயரில் பேரியங்கிக் குழுமம் ஒன்று நடத்தி வந்தார். அவருக்கு ஓரளவு தனித்தமிழ்ப் பற்றுமிருந்தது. அதனால், ‘செகந்நாதன்’ என்ற தமது இயற்பெயரை ‘உலகண்ணல்’ என்று மாற்றி வைத்துக் கொண்டார். ‘சாந்தா’ என்ற தமது துணைவியாரின் பெயரையும் ‘பொற்கொடி’ என்று மாற்றி வைத்தார். காட்டுப்பாடி விரிவிலிருந்த தமது வளமனைக்குக் ‘கலைமகள் திருமகள் நிலையம்’ என்றும், வேலூரிலிருந்த தமக்குச் சொந்தமான ‘வேலூர் ஆட்டோமோபைல்ஸ்’ என்ற பணிமனைக்கு (Workshop) ‘வேலூர்த் தானியங்கியகம்’ என்றும் பெயர் மாற்றி வைத்திருந்தார். குறிப்பாகத் தூயதமிழ்க் காவலர் திரு. அண்ணல்தங்கோ அவர்கள் வேலூரில் ஆண்டுதோறும் நடத்தி வந்த தமிழ்ச் சான்றோர் திருவிழாவிற்குத் திரு. உலகண்ணல் நன்கொடையாளராகவும் இருந்தார். பாவாணர் வேலூர் சென்றபோது, ஓரிருமுறை அவருடைய வளமனையில் தங்கியுள்ளார். ஆதலால், திரு. உலகண்ணலுக்கும் பாவாணர்க்கும் நட்பு ஏற்பட்டது.

        1961-ஆம் ஆண்டு திரு. அண்ணல்தங்கோ அவர்கள் வேலூரில் நடத்திய தமிழ்ச் சான்றோர் விழாவிற்குச் சென்றிருந்த பாவாணர் திரு. உலகண்ணலைச் சந்திக்க நேர்ந்தது. அப்போது, பாவாணர் ஓய்வு பெற்றுவிட்ட செய்தியறிந்த திரு. உலகண்ணல் பாவாணரிடம் காட்டுப்பாடி விரிவில் தமக்குச் சொந்தமான வீடொன்று வெறுமையாக உள்ளதென்றும் அதில் இலவயமாகத் தங்கி நூல்களை எழுதலாமென்றும் அவருடைய நூல்களை இலவயமாக வெளியிட்டுத் தருவதாகவும் கூறினார்.

        எவர் சொல்லையும் எளிதில் நம்பக்கூடிய இயல்புடையவர் பாவாணர். எனவே, திரு. உலகண்ணலின் மேலோட்டமானத் தனித்தமிழ்ப் பற்றையும் அவரது செல்வச் சிறப்பையும் கண்ட பாவாணர் சேலத்திற்குச் செல்லவிருந்த தமது முடிவை உடனே மாற்றிக் கொண்டு, அண்ணாமலை நகரிலிருந்து குடும்பத்தோடு வேலூருக்குச் சென்று விட்டார். வேலூருக்குச் சென்ற பாவாணர்க்குத் தொடக்கத்திலேயே காத்திருந்தது ஏமாற்றந்தான். பாவாணர் தமது குடும்பத்தோடு வேலூர் (காட்டுப்பாடி விரிவு) சென்றவுடனே திரு. உலகண்ணல் பாவாணரிடம், “நான் உங்களுக்குச் சொல்லியிருந்த வீட்டை என் தம்பி ஒரு கல்வி அதிகாரிக்கு வாடகைக்கு விட்டு விட்டார். அதற்குப் பகரமாக வேறொரு வீட்டைப் பார்த்து வைத்திருக்கிறேன்” என்று கூறி ஒரு சிறிய வீட்டில் பாவாணரைக் குடியமர்த்தினார். புத்தகப் பேழைகளை வைக்கக்கூடப் போதுமான இடமில்லாத, ஏந்தில்லாத ஒரு சிறிய வீடு அது. எடுத்த எடுப்பிலேயே ஏமாற்றத்தைக் கண்ட பாவாணர்க்கு வேறு வழியில்லாமல் அவ்வீட்டில் குடும்பத்தோடு குடியேற வேண்டிய நிலையேற்பட்டது. வீட்டு வாடகை 50/- உருபா மட்டும் மாதந்தோறும் (ஓராண்டிற்கு) திரு. உலகண்ணல் கொடுத்து வந்தார்.

        நாட்கள் ஓடிக் கொண்டிருந்தன. வருவாய் ஏதுமின்றித் தாமும் தம் குடும்பமும் இருந்து கொண்டிருந்ததால், அண்ணாமலைப் பல்கலைக் கழகத்தினின்று பெற்று வந்த ஈட்டு வைப்புப் பணம் கொஞ்சம் கொஞ்சமாகக் குறையத் தொடங்கியது.

        திரு. உலகண்ணல் அகவையில் பாவாணரை விட மிகவும் இளயவராக இருந்ததால், பொழுதுபோக்கில் அதிக நாட்டம் கொண்டிருந்தார். அடிக்கடி பாவாணரைத் திரைப்படத்திற்கு அழைத்துச் செல்வதுண்டு. அடிக்கடி பாவாணரை வெளியூர்க்குச் சுற்றுலா சென்றுவர அழைப்பதும் வழக்கம். ஆனால், அவற்றிலெல்லாம் நாட்டமில்லாத பாவாணர்க்குத் தமது பொன்னான நேரத்தை வீணாக்குவதுபோல் இருந்தது. அதனால், பாவாணர் எழுத்து வேலை பெரிதும் தடைபட்டது. மேலும், திரு. உலகண்ணலுக்கு நூல் வெளியிட்டு உதவும் எண்ணம் இருப்பதாகவும் தோன்றவில்லை. காலம்தான் வீணாய்ப் போய்க்கொண்டிருந்தது. அதனால், பாவாணர்க்கும் திரு. உலகண்ணலுக்கும் விரைவிலேயே கருத்து வேறுபாடு ஏற்பட்டு, அது நாளுக்கு நாள் அதிகரித்து வந்தது. நாளடைவில் திரு. உலகண்ணலும் பாவாணர் வீட்டிற்குச் செல்வதைக் குறைத்துக் கொண்டார்.

        இத்தகைய சூழலில் பாவாணர் ஒருநாள் திரு. உலகண்ணலைத் தமது இல்லத்திற்கு வரும்படி அழைத்தார். அவரும் அன்றிரவு பாவாணர் இல்லத்திற்கு வந்தார். அப்போது, பாவாணர் தாம் காட்டுப்பாடிக்கு வந்த நோக்கத்தையும் திரு. உலகண்ணல் தமக்கு அளித்த உறுதிமொழியை நிறைவேற்றாமற் போனதையும் தெளிவாக எடுத்துக் கூறினார். அப்போது, திரு. உலகண்ணல், “எனக்கு முதலில் திரைப்படம்தான்; இரண்டாவது தான் தமிழ்" என்று கூறினார். அதனால், வெகுண்ட பாவாணர் தமது வாழ்க்கையைச் சீரழித்து விட்டதாகத் திரு. உலகண்ணல்மீது குற்றஞ்சாட்டி, “என்னை மற்ற புலவனைப்போல் எண்ணிக் கொண்டீரோ” என்று தன்மானவுணர்வோடு கடுமையாகப் பேசினார். அதைக் கேட்ட திரு. உலகண்ணல் ஒன்றும் பேசாமல் எழுந்து போய்விட்டார். அதிலிருந்து அவர் பாவாணர் இல்லத்திற்குச் செல்வதை அடியோடு நிறுத்திக் கொண்டார். மேலும், அதுவரை அவர் கொடுத்து வந்த வீட்டு வாடகைப் பணமும் நின்றுபோனது.

        பாவாணர் தாம் ஏமாற்றப்பட்டதையும், தமக்கு ஏற்பட்ட பேரிழப்பையும் எண்ணி மிகவும் மனம் வருந்தினார். அவர் வைத்திருந்த வைப்புப் பணமும் சிறிது சிறிதாகச் செலவழிந்து போனது. குடும்பத்தில் வறுமை தலைதூக்கத் தொடங்கியது. எங்கள் தாயார் மிகுந்த கவலையில் வாடினார்.

    ‘குந்தித் தின்றால் குன்றும் மாளும்’

என்ற முதுமொழிக்கேற்ப, பாவாணர் நூல் வெளியீட்டிற்காக வைத்திருந்த பணமெல்லாம் செலவழிந்து போனது. குடும்பத்தின் பொருள்நிலை மிகவும் கேடானது.

        அப்போது, வேலூரில் தமிழன்பர் ஒருவர் ‘நாம் தமிழர்’ என்னும் சிறிய அச்சகம் ஒன்றை நடத்தி வந்தார். அவர் பாவாணரின் நிலை கண்டு வேலூர் ஊரிசுக் கல்லூரியில் ஓர் அறையை வாடகைக்கு எடுத்து, மாதக் கட்டணம் பத்து உருபா என்று பத்துப் பேரைச் சேர்த்து, அவர்களுக்குப் பாவாணர் தமிழ் சொல்லிக் கொடுக்க ஏற்பாடு செய்தார். குடும்பத்திலுள்ள வறுமைநிலை கருதியும் வாழ்க்கையில் தமக்கு ஏற்பட்ட ஏமாற்றத்தை எண்ணியும் பாவாணர் அத்திட்டத்திற்கு இசைய வேண்டிய நிலை யேற்பட்டது. ஆனால், அம்முயற்சியும் நீண்ட நாள் நீடிக்கவில்லை.

        நாலைந்த மாதங்களுக்குப் பின் வெவ்வேறு கரணியங்களைக் காட்டி ஒவ்வொருவராக நின்று போயினர். இறுதியில் ஒருவர் மட்டும் வந்து கொண்டிருந்தார். ஆனால், ஒருவர்க்காக அறைக்கு வாடகை கொடுத்தால், வீண் செலவு என்றெண்ணி அந்த அன்பரைத் தமது இல்லத்திற்கு வரும்படிச் சொன்னார் பாவாணர். அவரும் சிறிது காலம் வந்து விட்டு, வேலூரிலிருந்து காட்டுப்பாடி விரிவிற்கு வந்து போவது கடினமாக இருக்கிறதென்று கூறி நின்று போனார். மேன்மேலும் வறுமைநிலை அதிகரித்துக் கொண்டே போனதே தவிர, அதிலிருந்து மீண்டபாடில்லை.

        அந்நிலையில் எங்கள் மூத்த அண்ணியார் (பாவாணரின் மூத்த மருமகள்) நச்சுக் காய்ச்சலால் இறந்து போனார் என்ற செய்தி எங்கள் தந்தையாருக்கும் தாயாருக்கும் அடிமேல் அடி விழுந்தாற்போல் இருந்தது. மேலும், மணமாகாத தமது மகள் மங்கையர்க்கரசியைப் பற்றிய கவலை வேறு எங்கள் தாயாருக்கு. இவையெல்லாம் ஒன்றன்பின் ஒன்றாக நேர்ந்ததால், எங்கள் தாயாருக்குக் கடுமையான ஈளை நோய் கண்டது. குடும்பப் பொறுப்புகள் அனைத்தையும் கவனித்து வந்த எங்கள் தாயாருக்கு இப்படியொரு நிலை யேற்பட்டுள்ளதை யெண்ணி மிகவும் மனம் வருந்தினார் எங்கள் தந்தையார் பாவாணர். பெரிய அளவில் பணம் செலவழித்து எங்கள் தாயாருக்கு மருத்துவம் பார்ப்பதற்கோ கையில் போதிய பணமில்லை. அவ்வப்பொழுது சொற்பொழிவாற்றச் செல்வதால், எங்கள் தந்தையாருக்குக் கிடைத்த வருவாயைத் தவிர வேறொன்றமில்லை. அதுவும் மிகக் குறைந்த வருவாய்தான்.