பொன்மொழிகள்

ஆடவராயினும் பெண்டிராயினும், கற்றோராயினும் மற்றோராயினும், இளையோராயினும் மூத்தோராயினும், ஒருவர் மனத்தூய்மையும் உள்ளத்திண்மையும் உடையவராயின், அவர் எண்ணியதும் சொன்னதும் முயன்றதும் தப்பாது வாய்க்கும்.

பாவாணர்க்கு மணிமண்டபம்

        அ.தி.மு.க. ஆட்சியின்போது 12-4-2005 அன்று அன்றைய முதலமைச்சர் புரட்சித்தலைவி செயலலிதா அம்மா அவர்கள் சட்டப்பேரவையில் பாவாணர்க்கு அவர் பிறந்த ஊராகிய சங்கரன்கோயிலில் மணிமண்டபம் கட்டப்படுமென்று அறிவித்தார். ஆனால், பாவாணர் இயற்கையெய்திய மதுரை மாநகரிலேயே மணிமண்டபம் கட்டப்பட வேண்டுமென்ற எனது வேண்டுகோளை யேற்று, முதலமைச்சர் அவர்கள் மதுரை மாநகரிலேயே சிறப்பான ஓரிடத்தில் 39.60 இலக்கம் உருபா மதிப்பீட்டில் தேவநேயப் பாவாணர்க்கு மணிமண்டபம் கட்ட உத்தரவிட்டதோடு, அதற்கான முழுச் செலவினைத் தொகைக்கும் உடனே இசைவாணையும் (அரசாணை எண் 154/நாள் 16-6-2005) பிறப்பித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

        மணிமண்டபம் முழுமையாகக் கட்டப்பட்டு, பாவாணரின் முழுவுருவச் சிலை அமைக்கும் பணி தொடங்கவிருந்த நிலையில், தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு, தி.மு.க. ஆட்சியில் அமர்ந்தது. அதனால், பாவாணர் சிலை வடிக்கும் பணி தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தொடங்கப்பட்டது. ஆனால், எங்கள் தந்தையார் பாவாணர் சிலை எங்கள் ஒப்புதல் இல்லாமலேயே வடிக்கப்பட்டு நிறுவப்பட்டதால் அச்சிலை பாவாணர் உண்மைத் தோற்றத்திற்கு மாறாகவே அமைந்துள்ளது. அதன் உருவமைப்பில் பாவாணரின் மிடுக்கான தோற்றம் மறைந்தும் உடல் மெலிந்தும் முகப்பொலிவு நலிந்தும் ஒரு கை நீண்டும் மற்றொரு கை குறுகியும் காட்சியளிப்பதைக் காணும்போது, எங்கள் உள்ளத்தில் மிகுந்த வருத்தம் ஏற்படுகிறது.

        தி.மு.க. ஆட்சிக்காலத்தில் தமிழகத்தில் சிறப்புக்குரிய பலருக்கும் அஞ்சல்தலை வெளியிடப்பட்டு வந்தது. அவ்வரிசையில் மொழிஞாயிறு தேவநேயப்பாவாணர்க்கும் சிறப்பு அஞ்சல்தலை வெளியிட வேண்டுமென்று திராவிடர் கழகத் தலைவர் திருமிகு கி. வீரமணி அவர்களும், நடுவணரசு அமைச்சர் மாண்புமிகு சி.கே. வாசன் அவர்களும் நடுவண் அரசுக்கு வேண்டுகோள் வைத்தார்கள். அதனை ஏற்றுக்கொண்ட அன்றைய நடுவண் அமைச்சர் திருமிகு தயாநிதிமாறன் அவர்கள் முயற்சியால் கலைஞர் கருணாநிதியார் (அருட்செல்வனார்) அவர்கள் தலைமையில் பாவாணர்க்குச் சிறப்பு அஞ்சல்தலை 18-2-2006 அன்று வெளியிடப்பட்டது.

        ஆண்டுதோறும் அண்ணல் அம்பேத்கர் அவர்கள் பிறந்த நாளன்று சென்னையை யடுத்த மறைமலை நகரில் விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் திருமிகு திருமாவளவன் அவர்களால் சான்றோர் ஐவரின் பெயரில் சிறப்புக்குரியோர் ஐவருக்கு விருதுகள் வழங்கும் விழா நடைபெற்று வருகிறது. அதில் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் பெயரிலும் விருது வழங்கப்படுவது பாவாணர்க்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது.