பொன்மொழிகள்

தமிழன் என்னும் இனம் தமிழ் பற்றியதே யாதலால், தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம். அது தென்மாவாரியில் மூழ்கிப்போன குமரிநாடே ஆகும்.

நேசமணியம்மையார் மறைவு

        எங்கள் மூத்த அண்ணியார் காலமான பிறகு, எங்கள் மூத்த அண்ணன் நச்சினார்க்கினிய நம்பியின் பிள்ளைகள் இருவர் - அகவை ஐந்து, மூன்று என்ற நிலை. இருவரையும் எங்கள் தாயாரே வளர்க்க வேண்டிய நிலை யேற்பட்டது. அதனால், உள்ளத்தளவில் மட்டுமல்லாது உடல் அளவிலும் எங்கள் தாயாருக்குக் கூடுதல் சுமை யேற்பட்டது. குடும்பத்தின் பொருள் நிலையும் முன்னேறிய பாடில்லை. பல்வேறு கவலைகளால் அல்லல்பட்ட எங்கள் தாயாருக்குத் திடீரென ஒரு நாள் மாலை ஈளை நோய் அதிகமானதால், மிகவும் தொல்லைக்குள்ளானார். இரவு நேரம் செல்லச் செல்ல நோயின் கொடுமையும் அதிகரித்துக் கொண்டே போனது. மூச்சுத் திணறல் ஏற்பட்டு எங்கள் தாயார் மிகவும் தொல்லைக்கு ஆளானார். அந்நிலையைக் கண்டு மனம் பொறுக்காத எங்கள் தந்தையார் தமது நண்பரான திரு. அசரியா இல்லத்திற்கு விரைந்தார். அவர் உடனே தமது இன்னியங்கியை எடுத்துக் கொண்டு எங்கள் இல்லத்திற்கு வந்து, எங்கள் தாயாரை வேலூர்க் கிறித்துவ மருத்துவக் கல்லூரி மருத்துவமனைக்கு (C.M.C. Hospital) அழைத்துச் சென்றார். பாவாணரும் உடன் சென்றார். அப்போது இரவு 10 மணி இருக்கும்.

        திரு. அசரியா அம்மருத்துவமனையில் ஓர் உயர் அதிகாரியாக இருந்ததால், எங்கள் தாயாருக்கு உடனடியாக மருத்துவம் செய்யப்பட்டதுடன், மருந்துகளும் இலவயமாகக் கொடுக்கப்பட்டன. அவர்கள் மீண்டும் எங்கள் இல்லத்திற்கு வருவதற்கு இரவு 12.00 மணி ஆனது. எங்கள் தாயாரின் உடல்நிலையும் சற்று சரியானது. அப்போது, திரு. அசரியா தாம் மறுநாள் வெளியூர் செல்வதாகவும், திரும்பிவர மிகவும் பிந்திவிடு மென்றும் கூறிச் சென்றார்.

        மறுநாள் இரவுவேளை வந்தது. மீண்டும் ஈளை நோய் எங்கள் தாயாரைக் கடுமையாகத் தாக்கத் தொடங்கியது. எங்கள் தாயார் பெருந்தொல்லைக்கு ஆளானார். அந்நிலையில், எங்கள் தந்தையாரின் பணப்பையில் இருந்த பணம் 10 உருபா மட்டுமே. அதை வைத்துக் கொண்டு என்ன செய்வது? அப்பொழுது, எங்கள் இல்லத்திற்குப் பக்கத்தில் என் பள்ளி ஆசிரியர் இருவர் குடியிருந்தனர். இச்செய்தியை அறிந்த அவர்கள் இருவரும் தங்கள் சொந்த செலவில் காட்டுப்பாடி தொடர்வண்டிச் சந்திப்பிற்குச் சென்று, வாடகை இயங்கி (Taxi) கொண்டு வரச் சென்றனர். ஆனால், அது பயனற்றுப் போனது. அவர்கள் திரும்பி வருவதற்குள் எங்கள் தாயார் உயிர் பிரிந்து விட்டது. தொடர்வண்டி நிலையத்திற்குச் சென்ற ஆசிரியர்களும் ஒரு வாடகை வண்டியும் இல்லையென்று திரும்பி வந்தனர். அப்போது, எங்கள் தந்தையார் பாவாணர், “எனக்கு இப்படியொரு வறுமையான நிலை வருமென்று முன்பே தெரிந்திருந்தால், நான் இந்தத் தமிழ்த் துறைக்கே வந்திருக்க மாட்டேன்” என்று கண்ணீர் மல்கக் கூறினார். அந்நிலையிலும் பாவாணர் தம் தனித்தமிழ்க் கொள்கையினின்று பின்வாங்கவில்லை.

        பாவாணர் காலத்திற்குப் பின் தம்மைப் போல் இருக்க வேறு எவரையும் உருவாக்காமற் போய்விட்டார் என்பது பலருடைய வருத்தம். ஆனால், பாவாணர் அவர்களுடைய வினாவுக்குத் தரும் விளக்கம் தமக்கு ஏற்பட்ட நிலை பிறருக்கும் நேரக் கூடாது என்பதுதான்.

        எங்கள் தாயார் மறைவுக்குப்பின், என்னையும் என் தமக்கை மங்கையர்க்கரசியையும் வளர்க்கும் பொறுப்பு முழுவதும் எங்கள் தந்தையார்மேல் விழுந்தது. அவருக்குத் தம் துணைவியார் மறைந்த கவலை ஒரு பக்கம்; எங்களுடைய எதிர்காலத்தைப் பற்றிய கவலை மற்றொரு பக்கம். அதனால், அவருடைய ஆய்வுப் பணி முற்றிலும் தடைபட்டுப் போனது. ஏறக்குறைய ஓராண்டுக்குப் பின்னரே அத்துயரத்திலிருந்து அவரால் மீள முடிந்தது.

        எங்கள் தாயார் மறைவிற்குப்பின், அப்பிரிவு தாங்கொணாததா யிருந்தமையால், எங்கள் தந்தையாரையும் சில காலம் ஈளை நோய் கடுமையாகத் தாக்கி வந்தது. அதனால், பெருந்துன்பத்திற்கு உள்ளானார். அப்போது, நானும், என் தமக்கையும் மணமாகாத நிலையிலிருந்ததால், எங்களுக்காகவே பல துன்பங்களையும் தாங்கிக் கொண்டு வாழ்ந்தார் என்றே கூறலாம்.

        எங்கள் தாயார் மறைவிற்குப் பின், நாங்கள் குடியிருந்த வீட்டுக்காரர் வீடு வேண்டுமென்று சொன்னதால், அவ்வீட்டைக் காலி செய்து விட்டு, காட்டுப்பாடி விரிவின் மேற்குப் பகுதியில் வேறொரு வீட்டிற் குடியேறினோம். ஆனால், குடும்ப வாழ்க்கை இன்னமும் வறுமையைத் தழுவியே இருந்தது. வீட்டில் எங்கள் தந்தையாரும் திருமணமாகாத என் தமக்கையும் நானும் எங்கள் மூத்த அண்ணன் பிள்ளைகளும் இருந்தோம். அந்நாட்களில் பாவாணர் சொற்பொழிவாற்றச் சென்றதால், கிடைத்த சிறுவருவாயைத் தவிர பிழைப்பிற்கு வேறு வழியில்லை.

        காலம் சிறிது சென்றது. வேலூர்க் கிறித்துவக் கல்லூரி மருத்துவமனையில் ஒரு பணி இருந்தது. அது என்னவென்றால், மருத்துவமனையிலுள்ள மருத்துவர்ளுக்குத் (தெலுங்கர், மலையாளி) தமிழ்ச் சொற்கள் தொகுத்து வழங்கும் பணி. மாதச் சம்பளம் 200/- உருபா. குடும்பத்திலுள்ள வறுமையைக் கருத்திற் கொண்டு அப்பணியை மேற்கொண்டார் பாவாணர். நாட்கள் செல்லச் செல்ல வீட்டின் பொருள்நிலை சிறிது முன்னேறியது.

        எங்கள் தந்தையார் பாவாணர் தம் ஒரே மகளான மங்கையர்க்கரசியின் திருமணத்தைச் சிறப்பாக நடத்த விரும்பினாலும், அப்போது கையிற் போதிய பணமில்லாமல் இருந்தது. அதனால், தாம் பல ஆண்டாக அரும்பாடுபட்டுத் தொகுத்து வைத்திருந்த, “பழமொழி பதிமூன்றாயிரம்” என்னும் அரிய தொகுப்பு நூலைத் (தமிழகமெங்கும் வழங்கிவரும் பழமொழிகள் கொண்ட தொகுப்பு) தம் பழைய மாணவர் (சேலம் கல்லூரி மாணவர்) திரு. சு.கு. அருணாசலம் என்பவரிடம் அடமானமாக வைத்து மூவாயிரம் உருபா கடனாகப் பெற்றார். அந்த மாணவரோ தம் பொறுப்பற்ற தன்மையாலும் அக்கறையின்மையாலும் அவ்வரிய தொகுப்பு நூலைத் தொலைத்து விட்டார். அதனால், பிற்காலத்திற் பாவாணரிடம் போதிய பணமிருந்தும், அந்நூலைத் திரும்பப் பெற இயலாமலே போனது. அதையெண்ணிப் பாவாணர் பலமுறை வருந்தியதுண்டு.

        என் தமக்கையின் திருமணம் நிகழ்வுற்ற பின், சென்னையிலுள்ள தமது கணவர் இல்லத்திற்குச் சென்றுவிட்டார். அதன்பின், என் தந்தையாரும் நானும் காட்டுப்பாடி விரிவில் இரண்டாம் மேற்குக் குறுக்குச் சாலையில் ஒரு வீட்டிற் குடிபுகுந்தோம். அந்த இல்லத்தில்தான் பாவாணர் வாழ்க்கையில் ஒரு திருப்பம் ஏற்பட்டது என்று கூறலாம். எங்கள் குடும்பத்தின் பொருள்நிலை சற்று முன்னேறியது.

        1961-ஆம் ஆண்டு மதுரை எழுத்தாளர் மன்றத்தின் தலைவராக முனைவர் மா. அரசமாணிக்கனார் இருந்தார். அவர் பாவாணர்க்குச் சிறப்பு செய்ய வேண்டுமென்று பெரிதும் விரும்பினார். அதன்படி பலரிடம் பணம் தண்டப்பட்டு, பாவாணர்க்குப் பத்தாயிரம் உருபாவுக்கான பணமுடிப்பு வழங்கப்பட்டது.

        பேராயக் கட்சி (காங்கிரசு) அரசோ, வேறு கல்வி நிறுவனங்களோ, பெருஞ்செல்வர்களோ பாவாணரின் பெரும்பணிக்கு உதவ முன்வரவில்லை. பாவாணர் சார்பில் தி.மு.க. அரசிடம் முன்வைத்த வேண்டுகோளும் கிணற்றிற் போட்ட கல்லாயிற்று.

        ஒருநாள் திரு. வளங்கோ என்பவர் எங்கள் இல்லத்திற்கு வந்து, பாவாணரிடம், “திரு. ம.கோ.இரா. (M.G.R.) அவர்களிடம் தங்கள் அகரமுதலிப் பணியைப் பற்றிக் கூறியுள்ளேன். அவர் தங்கள் பணிக்குப் பொருளுதவி செய்வார்” எனக் கூறி பாவாணரைச் சென்னைக்கு அழைத்துச் சென்றார். ஆனால், திரு. ம.கோ.இராவோ தம்மிடம் பணமில்லை யென்றும் பாவாணர் அ.தி.மு.க. கட்சியில் இணைந்தால், கட்சிக் கூட்டங்கள் நடத்தி, அவற்றின் மூலம் பொருளுதவி கிடைக்க ஏற்பாடு செய்யலா மென்றும் கூறினார். ஆனால், பாவாணர்க்கு அதில் உடன்பாடில்லை. எனவே, அம்முயற்சி அத்துடன் நின்றுபோனது.

        அதன்பிறகு, பாவலரேறு பெருஞ்சித்திரனார் ‘தென்மொழி’ வாயிலாக ஒரு திட்டத்தை அறிவித்தார். அத்திட்டத்திற்குத் “தென்மொழிச் செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்” என்று பாவாணர் பெயர் சூட்டினார். அத்திட்டத்தின்படி 200 உறுப்பினர்கள் ஐந்தாண்டுக் காலத்திற்கு மாதந்தோறும் 10/- உருபா அனுப்ப வேண்டும். அவ்வகையில் மாதந்தோறும் 2,000/- உருபா பாவாணர் கைக்குக் கிடைக்கும். ஐந்தாண்டுக் காலத்தில் மொத்தத் தொகை 1,20,000/- உருபா ஆகும். அகரமுதலி வெளிவந்தபின் திட்ட உறுப்பினர் ஒவ்வொருவர்க்கும் ஒரு படி வழங்கப்படும் என்றும் கூறப்பட்டது.

        அத்திட்டத்தையேற்று 200 பேர் உறுப்பினராகிப் பணமும் அனுப்பலாயினர். ஐந்தாண்டுக்குரிய முழுத் தொகையையும் ஒரே கொடுப்பினையில் ஒரு சிலர் அளித்தனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.

        அத்திட்டம் பாவாணர் வாழ்வில் புத்துணர்வையும் நல்லத் திருப்புமுனையையும் ஏற்படுத்தியது என்றே கூறலாம். ஆயினும், அத்திட்டம் முழுமையாக நிறைவேறவில்லை. ஈராண்டிற்குப் பின் பலர் பணம் அனுப்புவதை நிறுத்திக் கொண்டனர். இறுதியில் முப்பதின்மர் மட்டுமே பணம் அனுப்பி வந்தனர். அவர்களும் பிற்காலத்தில் பணம் அனுப்புவதை நிறுத்திக் கொண்டனர்.

        அச்சூழலில் அகரமுதலித் திட்டத்தைத் தமிழக அரசே உருவாக்க வேண்டுமென்று பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அதன் விளைவாக, தி.மு.க. ஆட்சிக் காலத்தில் அத்திட்டம் தொடங்கப் பெற்றது.