பொன்மொழிகள்

குமரிக் கண்டத்தில் தமிழ் தவிர வேறொரு மொழியும் வழங்கவில்லை. வெளிநாட்டிலிருந்து பொருள்கள் வரின், அவற்றிற்கு உடனுடன் தூய தமிழ்ப் பெயர்கள் அமைக்கப்பட்டன.

படிப்பும் பணியும்

        தேவநேசன் எட்டாம் வகுப்புவரை படித்துச் சிறப்புறத் தேர்ச்சி பெற்றார். பிறகு, மேற்கல்வி பயில விரும்பியதாலும், அதற்கு ஆம்பூரில் வாய்ப்பில்லாத கரணியத்தாலும் பாவாணர் தாம் பிறந்த மண்ணாகிய நெல்லை மாவட்டத்திலுள்ள பாளையங்கோட்டைக்குச் சென்றார். ஆயினும், அங்கு மேற்கல்வி படிக்கத் தேவையான பொருள் நிலை இல்லை. அச்சமயம் முகவை மாவட்டத்தைச் சேர்ந்த சோழபுரத்தை யடுத்த ‘முறம்பு’ என்னும் சீயோன்மலையில் ‘யங்’ என்னும் துரைமகனார் சமயத் தொண்டாற்றி வந்தார். அவர் அங்கு உயர்நிலைப் பள்ளியொன்றை ஏற்படுத்தியதோடு, ஏழை எளியோர்க்கென ஓர் இலவச உணவு விடுதியையும் நடத்தி வந்தார். அத்துரைமகனார் தேவநேசனின் கல்வித் தேவையை யறிந்து, அவருக்கு உதவ முன்வந்தார். அதன் விளைவாகத் தேவநேசன் பாளையங்கோட்டையிலுள்ள கிறித்துவ ஊழியக் கழக (C.M.S.) உயர்நிலைப் பள்ளியிற் சேர்ந்தார். பள்ளியிறுதித் தேர்வு (S.S.L.C.) வரை அங்குப் பயின்று சிறப்பாகத் தேர்ச்சி பெற்றார்.

        அக்காலத்தில் தேவநேசன் 5-ஆம் படிவத்திலேயே (V Form) தட்டச்சு, கணக்கு வைப்பு ஆகிய பாடங்களையும், 6-ஆம் படிவத்தில் (VI Form) தமிழ், வரலாறு ஆகிய பாடப் பகுதிகளையும் சிறப்புப் பாடங்களாக எடுத்துப் படித்தார். அந்நாட்களில் பாவாணர் ஆங்கிலப் பற்றாளராகவும், ஆங்கிலத்திற் சிறந்த பேச்சாளராகவும் விளங்கியிருக்கிறார். பள்ளியிற் பயிலுங்காலத்தில் அவரை எல்லோரும் ‘சான்சன்’ (Samuel Johnson) என்றே அழைப்பர் என்று என் தந்தையாரே என்னிடம் கூறினார். பாவாணர் தமிழில் எந்த அளவிற்குக் கரை கண்டாரோ, அந்த அளவிற்கு ஆங்கிலத்திலும் சிறந்து விளங்கினார். அவர் ஆங்கிலத்தில் பேசும்போதும், எழுதும்போதும் பொதுவான சொல்லைப் பயன்படுத்தாது அதற்குரிய சிறப்பான சொல்லையே (appropriate word) பயன்படுத்துவது அவருக்குள்ள தனிச்சிறப்பாகும்.

        பலர் பாவாணர் ஒரு தமிழ்ப் புலவரென்றும் தமிழறிஞரென்றும் எண்ணிக் கொண்டிருப்பர். உண்மையில் பாவாணர் ஒரு மிகப் பெரிய மொழியாராய்ச்சியாளர். (A great linguist). ஏறக்குறைய அறுபதாண்டுக் காலமாகத் தமது வாழ்க்கையின் முதன்மைப் பணியான மொழியாராய்ச்சியில் ஈடுபட்டு, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், இந்தி, வடமொழி (சமற்கிருதம்) முதலிய இந்திய மொழிகளுடன் ஆங்கிலம், பிரெஞ்சு, இலத்தீனம், கிரேக்கம், ஆங்கிலோ சாக்சன் முதலிய அயல்நாட்டு மொழிகளும் சேர்த்து ஏறத்தாழ பதினேழு மொழிகளின் இலக்கணங்களை முறையாகக் கற்றறிந்து, ஆரியப் புல்லரும் வையாபுரிக் கூட்டமும் அஞ்சும் வகையில், உலக மொழிகளுக்கெல்லாம் தமிழே மூலம் என்ற உண்மையைத் தக்கச் சான்றுகளுடன் உலகிற்கு எடுத்துக்காட்டியவர். ஒவ்வொரு சொல்லின் ஆணிவேருக்கும் மூலம் காட்டிய மொழிப் பேரறிஞர்.

        திரு. தேவநேசன் ‘யங்’ துரைமகனாரின் பொருளுதவியால் உயர்நிலைப் பள்ளிப் படிப்பை முடித்தபின், சீயோன்மலை முறம்பிலுள்ள துரைமகனாரின் பள்ளியிலேயே 6-ஆம் வகுப்பு ஆசிரியராக அமர்த்தப்பட்டார். அதுவே திரு. தேவநேசன் முதல்முதலாகப் பணியாற்றிய பள்ளியாகும். இங்ஙனம் திரு. தேவநேசன் வளர்ப்புக்கும் கல்விக்கும் உறுதுணையாக விளங்கிய ‘தோக்கசு’ துரையாரும், ’யங்’ துரையாரும் என்றென்றும் பாராட்டுக்குரியவராவர். "கற்றது கைம்மண்ணளவு கல்லாதது உலகளவு" என்னும் முதுமொழிக்கேற்ப திரு. தேவநேசன் தமது படிப்பை அத்துடன் நிறுத்திக் கொள்ள விரும்பவில்லை. பல்வேறு துறைகளைப் பற்றி ஆராய வேண்டுமென்ற ஆவலும் பற்பல மொழிகளைக் கற்க வேண்டுமென்ற துடிதுடிப்பும் அவர் உள்ளத்திற் கிளர்ந்தன. அதன் விளைவாகத் தம் வருவாயிற் பெரும்பங்கை நூல்கள் வாங்குவதற்கே அவர் பயன்படுத்தினார்.

        திரு. தேவநேசன் வாங்கிய நூல்கள் படிப்படியாகச் சேர்ந்து ஐயாயிரத்தை யெட்டின. அவற்றை யெல்லாம் பதனமாய்ப் பாதுகாக்கப் பேழைகள் தேவைப்பட்டன. அன்றைய நிலையில் அவற்றை யெல்லாம் உடனடியாக வாங்குவதற்குப் பொருள்நிலை கிடையாது. எனவே, அவ்வப்போது கிடைக்கும் பணத்தைக் கொண்டு ஒவ்வொன்றாகப் பன்னிரண்டு மரப்பேழைகள் வாங்கினார். அவற்றில் சேர்த்து வைத்த நூல்களை யெல்லாம் திரு. தேவநேசன் பலமுறை மீண்டும் மீண்டும் படித்துப் பல்வேறு துறைகளிலும் கரை கண்டவராக விளங்கினார்.

        திரு. தேவநேசன் சீயோன்மலை முறம்பில் சிறிது காலம் பணியாற்றிய பின், 1921-ஆம் ஆண்டு மீண்டும் வடார்க்காடு மாவட்டம் ஆம்பூர் சென்றார். அங்கு அவர் முன்பு கல்வி பயின்ற பள்ளியிலேயே தமிழ் கற்பிக்கும் பணியில் அமர்த்தப்பட்டார். அப்பள்ளி 1922-ஆம் ஆண்டு உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்படவே, திரு. தேவநேசனும் அங்கு உதவித் தமிழாசிரியராகப் பதவி வுயர்வு பெற்றார்.

        தேவநேசனின் ஆம்பூர் வாழ்க்கை அவருக்கு ஒரு திருப்புமுனையை ஏற்படுத்தியது என்றே கூறலாம். அக்காலத்தில் பெரும்புலவர் எவரேனும், ஒருவர்க்குத் தகுதிச் சான்றிதழ் அளித்தால், அவரை உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராக அமர்த்தலாம் என்ற ஒரு வழக்கம் இருந்து வந்தது. அச்சமயம் தேவநேசனுக்கு நெருங்கிய நண்பரான ‘பண்டிதர் மாசிலாமணி’ என்பார் பாளையங்கோட்டையில் சி.எம்.எசு. உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியராகப் பணியாற்றிக் கொண்டிருந்தார். எனவே, தேவநேசன் அவரை அணுகவே, அவரும் தேவநேசனுக்குச் சிறப்பான வகையில் தகுதிச் சான்றிதழ் அளித்ததோடு, அதில் அவரைத் ’தேவநேசக் கவிவாணன் என்றும் குறிப்பிட்டிருந்தார். தேவநேசனும் உயர்நிலைப்பள்ளியில் தமிழாசிரியரானார். அதையடுத்து, 1924-இல் தலைமைத் தமிழாசிரியர் தகுதிக்குத் தேவையான ‘மதுரைப் பண்டிதர்’ தேர்வு எழுதி வெற்றியும் பெற்றார். அத்தேர்வில் அம்முறை வேறு எவரும் வெற்றி பெற்றிலர் என்பது குறிப்பிடத்தக்கது.

        தேவநேசனின் ஆய்விற்கும் தொண்டார்வத்திற்கும் ஆம்பூர் ஏற்றதாக இல்லை. எனவே, அவருடைய நாட்டம் சென்னை நோக்கி இருந்தது. ஆம்பூரில் மூவாண்டு பணியாற்றிய பின், தேவநேசன் சென்னைக்குச் சென்றார். சென்னையில் திருவல்லிக்கேணி ‘கெல்லட்’ உயர்நிலைப்பள்ளி, தாம்பரம் கிறித்துவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளி, பெரம்பூர் ‘கலவல கண்ணனார்’ உயர்நிலைப்பள்ளி ஆகியவற்றில் தேவநேசன் உதவித் தமிழாசிரியராகவும், தமிழாசிரியராகவும் பணியாற்றியுள்ளார்.

        தேவநேசன் சென்னையில் வாழ்ந்து கொண்டிருந்த காலத்திலேயே, திருநெல்வேலி தென்னிந்திய தமிழ்ச் சங்கப் புலவர் தேர்விற்கான வேண்டுகைப் படிவம் அனுப்பினார். அப்படிவத்தில், தேவநேசக் கவிவாணன் என்னும் தமது பெயரைத் தேவநேசப் பாவாணன் என்று குறிப்பிட்டுள்ளார். அதுமுதல் கவிவாணர் பாவாணர் ஆனார். பிற்காலத்தில், தேவநேசன் என்பதையும் ‘தேவநேயன்’ என்று மாற்றிக் கொண்டார். ஆனால், தேவநேயன் என்ற இயற்பெயரைவிட பாவாணர் என்னும் பின்னொட்டுப் பெயரே பிறரால் மிகுதியாக வழங்கப்பட்டு வருகிறது.

        நெல்லைப் புலவர் தேர்வு 1926-ஆம் ஆண்டு சூன் 28 முதல் சூலை 5 வரை நடைபெற்றது. அத்தேர்வில் பாவாணர் மூன்றாம் வகுப்பில் வெற்றி பெற்றார். மதுரைப் பண்டிதர் தேர்வில் 1924-ஆம் ஆண்டு எங்ஙனம் தேவநேசன் ஒருவரே வெற்றி பெற்றாரோ அங்ஙனமே நெல்லைப் புலவர் தேர்விலும் அந்த ஆண்டு பாவாணர் ஒருவரே தேர்ச்சி பெற்றார் என்பது குறிப்பிடத்தக்கது. அதன்பிறகு, கீழைக் கலை (B.O.L.) தேர்வும் எழுதி வெற்றி பெற்றார்.

        பாவாணர் சென்னையில் ‘கெல்லட்டு’ உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டும், கிறித்துவக் கல்லூரி உயர்நிலைப்பள்ளியில் மூவாண்டும் பணியாற்றியபின், மன்னார்குடியில் ‘பின்லே’ (Finlay) கல்லூரி உயர்நிலைப் பள்ளியில் ஆறாண்டு பணியாற்றியுள்ளார். அக்காலத்தில் மன்னார்குடியில் வாழ்ந்த இராசகோபாலர் என்னும் இசைப் பெரும் புலவரிடம் பாவாணர் முறையாக இசை பயின்றார். ஏற்கனவே, பாவாணர்க்கு இசைத் தமிழிலும் இசைப்பா இயற்றுவதிலும் இசைக் கருவி இயக்குவதிலும் ஈடுபாடு இருந்ததால், அப்பயிற்சி மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. அதன் விளைவாகவே பிற்காலத்தில் வெளியிடப்பட்ட எங்கள் தாயார் நேசமணி அம்மையார் நினைவு வெளியீடான ‘இசைத்தமிழ்க் கலம்பகம்’ என்னும் இசை நூல் வெளிவந்தது.

        பாவாணர் மன்னார்குடியில் வாழ்ந்த காலத்தேதான் சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் தொடர்பேற்பட்டது. கழக வெளியீடான ‘செந்தமிழ்ச் செல்வி’ (1931 சூன் - சூலை) இதழில் பாவாணர் முதற் கட்டுரை வெளிவந்ததும் இக்காலத்தில்தான். அது ஒரு மொழியாராய்ச்சிக் கட்டுரை. அதில் ஆங்கிலம், கிரேக்கம், இலத்தீன் ஆகிய மும்மொழிகளிலும் சென்று வழங்கும் தென்சொற்கள் ஆயிரக்கணக்கின என்பதை ஐந்நூற்றுக்கும் மேற்பட்டவற்றால் அகரவரிசையில் அவற்றின் முழு விளக்கத்துடன் காட்டியுள்ளார்.

        சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழகத்துடன் 1931-இல் பாவாணர் கொண்ட தொடர்பே ஏறத்தாழ ஐம்பதாண்டு காலமாக அவர் படைப்புகள் பலவும் வெளிவரப் பெருந்துணையாக இருந்துள்ளது. மேலும், கழகத் தொடர்பு பாவாணர்க்கு வெறும் பதிப்புத் தொடர்போடு மட்டும் நின்றுவிடாமல், பாவாணர் விரும்பும் பழைய நூல்களை வாங்கியனுப்புவதிலும் பல புதிய நூல்களைத் தருவித்துக் கொடுப்பதிலும் அவர் தமிழ்த் தொண்டுக்குப் பேருதவியாக இருந்தது.

        மன்னார்குடியில் பாவாணர் ஆறாண்டு பணியாற்றிய பின், ‘பின்லே’ கல்லூரி வளர்ச்சி குன்றி உயர்நிலைப்பள்ளி நிலைக்குத் தள்ளப்பட்டது. இடைநிலை வகுப்பு எடுக்கப்பட்டு விட்டது. அதன் விளைவால் கல்லூரியிற் பணியாற்றிய முதுவர், பதவி இறங்கவும் இளையவர் பள்ளியை விட்டு வெளியேறவும் வேண்டிய நிலை ஏற்பட்டது. இளையவருள் முதலில் வெளியேற வேண்டியவர் திரு. கோபாலகிருட்டிணர் என்பார். அச்சமயம், அவருடைய வீடும் மழையினால் இடிந்து போனது. அந்நிலையில் அவர் வேலையின்றி வெளியேறினால், அவர்தம் மனைவி மக்களுடன் வறுமையில் வாட நேருமென்று மனமுருகிய பாவாணர் தாம் வெளியேறிவிட்டு, திரு. கோபாலகிருட்டிணர் அப்பள்ளியிலேயே பணியாற்ற வாய்ப்பளித்தார். " வரியார்க்கொன் றீவதே ஈகைமற் றெல்லாம் குறியெதிர்ப்பை நீர் துடைத்து " என்ற குறளுக்கேற்ப, திரு. கோபாலகிருட்டிணர் பிராமணரென்று அறிந்திருந்தும் தக்க சமயத்தில் அவர்க்கு உதவ முன்வந்தது பாவாணரின் ஈகையுள்ளத்தையே காட்டுகின்றது. இவரல்லவோ தேவநேயர்.

        மன்னார்குடியில் பாவாணர் ஆறாண்டு பணியாற்றியது எளிதானதன்று. அவ்வாழ்க்கை அவர் விரும்பியவாறு அமையவில்லை. மிகுந்த வருத்தத்துடனே அவர் அங்குப் பணியாற்ற வேண்டிய நிலையே இருந்தது. அச்சமயம் வாணியம்பாடி இசுலாமியக் கல்லூரியில் வித்துவான் பதவி இருப்பதறிந்து, அதற்கு வேண்டுகைப் படிவம் அனுப்பினார். ஆனால், அதற்குள் அப்பதவி நிரப்பப்பட்டு விட்டது அறிந்து மனம் வெதும்பினார். அந்நிலையில், மேல் தேர்வு எழுதி வெற்றி பெற்றால் தான் பணக் குறைவிராது என்றெண்ணினார் பாவாணர். மேலும், ‘முதற்றாய் மொழி’ என்னும் நூலை விரைந்து அச்சிட்டு வெளியிட்டால், தாம் பணியாற்றும் பள்ளி முதல்வர்க்குத் தம்முடைய அறிவும் ஆற்றலும் நன்கு புலனாகுமென்று எண்ணினார்.

        ஆறாண்டுக்குப் பின், மன்னார்குடியிலிருந்து வெளியேறிய பாவாணர் திருச்சி ‘புத்தூர் ஈபர் கண்காணியார்’ (Bishop Hiber High School) உயர்நிலைப்பள்ளியில் பணி மேற்கொண்டார். அங்குப் பணியாற்றும் காலத்தே 1940-இல் மொழியாராய்ச்சி நூலான ‘ஒப்பியன் மொழி நூல்’ என்னும் நூலை வெளியிட்டார். அது மட்டுமல்லாமல், மாணவர்க்குப் பயன்தரும் உயர்தரக் கட்டுரை இலக்கணம், இயற்றமிழ் இலக்கணம், கட்டுரை வரைவியல், வேர்ச்சொல் கட்டுரை, செந்தமிழ்க் காஞ்சி ஆகிய நூல்களெல்லாம் வெளிவந்தன அக்காலத்தேதான். ஒப்பியன் மொழி நூல் சரியாக விற்கப்படாமையாலும் மிகுந்த பண நெருக்கடியாலும், அப்படிகளை யெல்லாம் தந்தை பெரியார் வாயிலாக அரை விலைக்கு விற்க நேர்ந்தது.

        திருச்சியில் பணியாற்றிக் கொண்டிருந்த நாட்களில் சை.சி.நூ.ப. கழகத்தின் வேண்டுகோளுக்கிணங்கக் கலைச்சொல்லாக்கப் பணியில் ஈடுபடுகின்றார். மொழியியல் துறையில் அரும்பெருந் தொண்டாற்றிய பாவாணர் அதற்குப் பொலிவும் வலிவும் ஊட்டவும் தமது கொள்கையை உலகறிய நிலைநாட்டவும் கருதி, திராவிட மரபு தோன்றிய இடம் ‘குமரி நாடே’ என்னும் இடு நூலை (Thesis) எழுதி, முனைவர் (Ph.D.) பட்டத்திற்காகச் சென்னைப் பல்கலைக்கழகத்திற்கு அனுப்பி வைத்தார். ஆனால், அவ்விடுநூல் பல்கலைக்கழகத்தால் ஏற்றுக் கொள்ளப்படவில்லை. அதற்குக் கரணியம் அப்போது ஆய்வுக் குழுவில் இடம்பெற்றிருந்தோரின் காழ்ப்புணர்ச்சியேயாகும். ஆனால், பாவாணர் அதைப் பற்றிச் சற்றும் கவலைப்படவில்லை. “இது இற்றைத் தமிழின் நிலை என்னவென்பதையேக் காட்டுகின்றது. இனி இந்தியாவிற்குள் எனக்கு ஒரு தேர்வுமில்லை. என் நூல்களையெல்லாம் ஒவ்வொன்றாக நானே வெளியிடப் போகிறேன்" என்று மனம் வெதும்பிக் கூறினார். அதனைச் செயலிலும் காட்டினார்.

        திருச்சியில் பணியாற்றுங் காலத்தேதான் 1937-இல் பாவாணர் கட்டாய இந்திக் கல்விக் கண்டனம், செந்தமிழ்க் காஞ்சி ஆகிய நூல்களை வெளியிட்டார்.

        1943-ஆம் ஆண்டு 7-ஆம் மாதம் 6-ஆம் பக்கல் பாவாணர் தமது வறுமையைச் சுட்டிக்காட்டி, சை.சி.நூ.ப. கழக ஆட்சி மேலாளர் தாமரைத்திரு. வ. சுப்பையா பிள்ளை அவர்கட்கு ஒரு மடல் எழுதுகிறார். அம்மடலில் அவர் குறிப்பிட்டுள்ள செய்தி,

        “அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் எனக்கு வேலையும் கிடைக்கவில்லை; பதிலுமில்லை; தற்போது வெற்றி மாளிகையில் ‘போர்ப் பாடலாசிரியன்’ வேலைக்கு வேண்டியிருக்கிறேன். திரு. கே.எம். பாலசுப்பிரமணியம் அவர்கள் பாடத்துறையில் மாகாணத் தலைவர். அவர்களுக்கும் ஒரு கடிதம் எழுதியிருக்கிறேன். அவர் மனம் வைத்தால் 100 உருபாய்க்கு எனக்கொரு வேலை கொடுக்கலாம். அன்புகூர்ந்து உடனே அவர்களிடம் சென்று எனது யாப்புத் திறனையும் பாடுமியல்பையும் எடுத்துக்கூறி ஒரு வேலை கிடைக்கச் செய்க. தற்போது என் வருவாய் போதாமல் வருந்துவதோடு, தமிழ் முன்னேற்ற முயற்சியும் தடைபட்டுள்ளது" என்பதே. பாவாணர் நீண்ட காலம் ஒரே பள்ளியிற் பணியாற்றியது திருச்சி ஈபர் கண்காணியர் உயர்நிலைப்பள்ளிதான். 1943-ஆம் ஆண்டு பாவாணர் சை.சி.நூ.ப. கழக ஆட்சி மேலாளர் தாமரைத்திரு. வ. சுப்பையா பிள்ளை, முனைவர் அரசமாணிக்கனார் ஆகிய இருவரின் வேண்டுகோளையும் வலியுறுத்தலையும் ஏற்று, திருச்சியை விட்டுச் சென்னை முத்தையாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளிக்குச் சென்றார். ஆனால், அப்பள்ளியில் பாவாணர் ஓராண்டே பணியாற்றினார். அங்குத்தான் பாவாணரின் ‘திரவிடத்தாய்’ என்னும் நூல் சை.சி.நூ.ப. கழகப் பதிப்பாக வெளிவந்தது. ‘செந்தமிழ்ச் செல்வி’ இதழிலும் நிரம்பக் கட்டுரைகள் எழுதியுள்ளார். சென்னை வாழ்க்கை பாவாணர்க்கு ஒரு கசப்பான நிலையையே தந்துள்ளது. எல்லாம் பொருள் பற்றாக்குறைதான். வீட்டு வாடகை உயர்வு, பிள்ளைகள் படிப்பு சீர்கெடுதல் போன்ற பல சிக்கல்களைக் குறித்துக் கவலை கொள்கிறார் பாவாணர். மேலும், அக்காலத்திற் தமிழாசிரியப் பணியும் சிறப்பாக இல்லை. இதனால், ஓர் இக்கட்டான நிலைக்கு ஆளாகிறார்.

        முத்தையாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியிற் பணியாற்றுங் காலத்தில் நேர்ந்த ஒரு நிகழ்வை நினைவு கூர்கின்றார் பாவாணர். அக்காலத்திற் பொதுவாக ஆசிரியர்கள் வகுப்பறைக்குள் நுழையும்போது, ‘சைலன்ஸ்’ என்று சொல்வது வழக்கம். ஆனால், பாவாணர் அதற்கு மாறாக ‘அமைதி’ என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார். அதைக் கேட்ட மாணவர்கள் அதுவரை கண்டிராத ஒன்றைக் கேட்பதாக வியந்துள்ளனர். ஆங்கில வரலாற்றில் ‘எட்கார்’ என்பாரைப் பற்றி படித்த மாணவர் சிலர் அவரது படத்தையும் பாவாணர் தோற்றத்தையும் ஒப்பிட்டு வியந்து, ‘அமைதியை விரும்பும் எட்கார்’ எனப் பட்டப் பெயரிட்டனராம்.

        சென்னை முத்தையாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில் ஓராண்டே பணியாற்றிய பாவாணர்க்குச் சேலம் நகராட்சிக் கல்லூரியிற் பணியாற்ற ஓர் அருமையான வாய்ப்பு கிட்டியது. அதற்குக் கரணியம் அக்கல்லூரி முதல்வரும் மிகுந்த தமிழ்ப் பற்றாளரும் பாவாணரால் மிகவும் மதிக்கப்பட்டவருமான பேராசிரியர் இராமசாமிக் கவுண்டரின் பேருதவியே யாகும். சேலம் கல்லூரி வாழ்க்கைதான் பாவாணர் வாழ்வில் ஒரு மிகப்பெரிய மற்றத்தையும் மனமகிழ்ச்சியையும் தந்தது. பாவாணர் வாழ்வில் அது ஒரு பொற்காலம் என்றே கூறலாம்.

        ‘தமிழ்நாட்டில் பல கல்லூரிகள் இருந்தபோதிலும், எந்தவொரு கல்லூரியிலும் எனக்கு இடந்தரவில்லை. பல ஆண்டாக உயர்நிலைப்பள்ளிகளிலேயே உழன்று வந்த என்னைக் கல்லூரிக்கு அழைத்து என் வாழ்வை உயர்த்தியவர், சேலம் கல்லூரி முதல்வர் பேராசிரியர் இராமசாமிக் கவுண்டர் ஒருவரே’ என உளமாரப் பாராட்டினார் பாவாணர். தொடக்கத்திற் துணைப் பேராசிரியராகப் பொறுப்பேற்ற பாவாணர் பின்னர் தமிழ்ப் பேராசிரியராகவும் தமிழ்த்துறைத் தலைவராகவும் ஆனார்.

        சேலம் கல்லூரியிற் பணி மேற்கொண்ட பின்னரும், பாவாணர் தமது கடந்த காலச் சென்னை வாழ்க்கையையும் அதனால் நேர்ந்த இழப்பினையும் எண்ணி மனம் வெதும்புகிறார். சென்னை முத்தையாலுப்பேட்டை உயர்நிலைப் பள்ளியில் ஆசிரியப் பணியை ஒப்புக் கொண்டதன் விளைவால், நூல்கள் வைக்கப்பட்டிருந்த இரு நிலைப் பேழைகளையும் வாங்குவதற்கரிய சில நாற்காலிகளையும் விற்றுவிட நேர்ந்ததென்றும், அவற்றை மீண்டும் வாங்க இயலவில்லை யென்றும் கவலை கொண்டார். மேலும், சேலம் சென்ற தொடக்கத்திலேயே நகராட்சித் தலைவரும் கல்லூரித் தாளாளருமான திரு. இரத்தினசாமிப் பிள்ளையிடம் 30 உருபா கடன் கொள்ள வேண்டியதாயிற் றென்றும் வருத்தத்துடன் கூறுகின்றார். அத்தொகை மருத்துவச் சான்றிதழ் பெறவும் காலணி, மேலாடை ஆகியவை வாங்கவுமே ஆகும் என்று மனம் வருந்துகிறார்.

        பாவாணர் சேலம் கல்லூரியிற் பணியேற்க உதவியவரும் அன்றைய நகராட்சி ஆணையரும் தமிழ்ப்பற்று மிக்கவருமான திரு. கீ. இராமலிங்கனாரும் ஒருவர். ஆகவே, பேரா. இராமசாமிக் கவுண்டர், திரு. இரத்தினசாமிப் பிள்ளை, திரு. கீ. இராமலிங்கனார் ஆகிய மூவரும் பாவாணர் தமிழ்த் தொண்டுக்குப் பேருதவியாக இருந்துள்ளனர் என்பது நன்கு புலனாகிறது. மேலும், கல்லூரிப் பொறுப்பாளர்களான இம்மூவரும் பாவாணர் விருப்பாளர்களாகவும் மாறினர். சொற்பொழிவுக் கூட்டங்களிலும் திருமண நிகழ்ச்சிகளிலும் ஒருவரோடொருவர் கலந்து உரையாடும் வாய்ப்பேற்பட்டமையால் நண்பர்களாகவும் அமைந்தனர்.

        கல்லூரி முதல்வர் பேரா. இராமசாமிக் கவுண்டர்பால் பாவாணர் அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டிருந்தார். முதல்வரும் மிகுந்த நட்புடன் பாவாணரோடு பழகி வந்தார். கல்லூரி வளாகத்தை அடுத்தே முதல்வர் இல்லமும் அமைந்திருந்தது. அவர் இல்லத்திலிருந்து குறுக்கு வழியாகக் கல்லூரி வளாகத்திற்குள் வரவியலும். கல்லூரி வளாகம் மிகப்பெரிய விளையாட்டுத் திடலையும் புல்வெளியையும் கொண்டதாயிருந்தது. முதல்வர் நாள்தோறும் இரவு 9.00 மணியளவில் புல்வெளிக்கு வருவது வழக்கம். அவர் வருவதை நோக்கிப் பாவாணர் தாமும் புறப்பட்டுச் செல்வார். இருவரும் இரவு 11.00 மணி வரை உரையாடி மகிழ்வர். சேலம் கல்லூரியிற்தான் பாவாணரிடம் திரு. துரைமாணிக்கம் என்ற பெருஞ்சித்திரனார், முனைவர் வ.செ. குழந்தைச்சாமி, மேனாள் அமைச்சர் திரு. இராசாராம், திரு. அருணாசலம் ஆகியோர் பயின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களுள் திரு. பெருஞ்சித்திரனார், பிற்காலத்தில் ‘தென்மொழி’ இதழாசிரியராகவும் பாவாணரால் தோற்றுவிக்கப்பட்ட உலகத் தமிழ்க் கழகப் பொதுச் செயலாளராகவும் விளங்கினார். மேலும், இவரே ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல்’ அகரமுதலித் திட்டத்திற்குத் தமிழக அரசு உதவ முன்வராத நிலையில், ‘தென்மொழி’ இதழ் வாயிலாகச் ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்’ என்னும் ஒரு திட்டத்தை அறிமுகப்படுத்திப் பாவாணருக்கு உதவியதுடன் ஓரளவு அவர் வறுமை நீங்கவும் செய்த சிறப்புக்குரியவர்.

        சேலம் கல்லூரியிற் பணியாற்றுங் காலத்தே, பாவாணர் தாமே பயின்று சென்னைப் பல்கலைக்கழகத்தில் 1952-இல் முதுகலை (M.A.) பட்டம் பெற்றார். மேலும், தமக்கு ஏற்கனவே ஆங்கிலத்தில் மிகுந்த ஆர்வமும் அறிவும் இருந்தமையால், ஆங்கில மொழியைச் சிறப்பாகக் கற்றறிருந்தார். ஓர் ஆங்கிலப் பேராசிரியரை விஞ்சும் அளவிற்கு ஆங்கில இலக்கணத்திற் பயிற்சி பெற்றிருந்தார். அதன் விளைவாகவே அக்காலத்தில் சேலம் கல்லூரியில் ஏரணம், வரலாறு ஆகிய பாடங்களைத் தமிழ் வழியே பயிற்றுவிக்கும்படி, கல்வியமைச்சர் ஆணையிட்டதையடுத்து, ஆங்கிலம் மட்டும் கற்ற பேராசிரியர் கற்பிப்பதற்கு அரிதான ஏரணத்தைத் தனித்தமிழ்க் குறியீடுகளோடு சிறப்பாக மொழிபெயர்க்க இயன்றது. பாவாணர் சேலம் கல்லூரியிற் பணியாற்றிய காலத்தில் அவர் தலைமையில் அறிஞர் அண்ணாத்துரையார் சொற்பொழிவு ஆற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

        பாவாணர் தமது வாழ்க்கையில் ஓராண்டு நடுநிலைப் பள்ளியிலும் இருபத்தீராண்டு உயர்நிலைப் பள்ளிகளிற் தலைமைத் தமிழாசிரியராகவும் பன்னீராண்டு கல்லூரியிற் தமிழ்ப் பேராசிரியராகவும், தமிழ்த்துறைத் தலைவராகவும் பணியாற்றியுள்ளார். சென்னை பெரம்பூரில் கலவல கண்ணனார் உயர்நிலைப்பள்ளியிற் பணி கிடைத்ததற்குப் பேராயக் கட்சிப் பெருமகனும் பெயர்பெற்ற அறுவை மருத்துவருமான பண்டகர் (Dr.) மல்லையாவின் பரிந்துரையே கரணியம் என்று பாவாணர் கூறுகின்றார். இரண்டாவதாக முத்தையாலுப்பேட்டை உயர்நிலைப்பள்ளியில், முனைவர் (Dr.) அரசமாணிக்கனார் அவர்களின் பரிந்துரையினாலேயும் தமிழ்ப் பெருமகன் (C.D.) நாயகம் அவர்களின் தமிழ்ப் பற்றினாலேயும் அன்றைய பள்ளியாளுங் கணத்தாரின் தமிழ்வுணர்ச்சியினாலேயும் வேலை கிடைத்துள்ளது என்றுரைக்கின்றார்.