பாவாணர் பெரும் பிரிவு

        பாவாணர் அகரமுதலித் திட்ட இயக்குநராகப் பணியாற்றி வருங்காலத்தே 1981-ஆம் ஆண்டு மதுரை மாநகரில் தமிழக அரசுச் சார்பில் ஐந்தாவது உலகத் தமிழ் மாநாடு நடைபெற்றது. அதுவரை எந்த ஓர் உலகத்தமிழ் மாநாட்டுக்கும் பாவாணர்க்கு அழைப்பு இல்லாத நிலயைில், மதுரையில் நடைபெற்ற மாநாட்டிற் பங்கேற்க (அப்போது பாவாணர் அரசுப் பணியில் இருந்த கரணியத்தால்) அழைப்பு வந்தது. அதுகுறித்து பெருமகிழ்ச்சி யடைந்தார் பாவாணர்.

        மதுரை மாநாடு 5-1-1981 அன்று தொடங்கியது. முதல் நாள் நிகழ்ச்சியில் உரையாற்றினார் பாவாணர். அப்போது அவர், “இந்த (ஐந்தாவது) மாநாட்டில் எனக்குத் தக்க இடமொன்று அளிக்கப்பட்டிருக்கிறது. நம் முதலமைச்சர் திரு. இராமச்சந்திரன் என்னும் அழகமதியாருடைய ஆட்சியிலே எனக்கு இந்த வாய்ப்பு கிடைத்ததென்று”, திரு. ம.கோ.இரா. (M.G.R.) அவர்களைப் பாராட்டிப் பேசினார்.

        மாநாட்டில் உரையாற்றிய அன்று இரவே அவருக்கு மாரடைப்பு ஏற்பட்டு அங்குள்ள அரசு இராசாசி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாநாடு 1981-ஆம் ஆண்டு சனவரி மாதம் 5-ஆம் பக்கல் தொடங்கி 10-ஆம் பக்கல் வரை நடைபெற்றது. அதுவரை முதலமைச்சர் மதுரையில் இருந்ததாலும், பாவாணரை மருத்துவமனையில் நேரிற் சென்று பார்த்ததாலும், பாவாணரை மருத்துவர்கள் சிறப்பாகக் கவனித்து வந்தனர். மாநாடு முடிந்து முதலமைச்சர் சென்னைக்குத் திரும்பியவுடன், அக்கறையின்றி விட்டுவிட்டனர். மேலும், அங்குப் போதிய மருந்துகளுமில்லை. 15-1-1981 அன்று பாவாணர் உடல்நிலை மிகவும் கேடானது. அப்போது, நான் சென்னையிலுள்ள முதலமைச்சர் அவர்கட்குப் பாவாணர் உடல்நிலை குறித்து தொலைவரி (Telegram) கொடுத்தேன். முதலமைச்சர் அவர்களும் உடனடியாக, சென்னையிலிருந்து இரு தலைமையான மருத்துவர்களை வானூர்தியில் அனுப்பி வைத்தார். அவர்கள் இருவரும் தங்களால் இயன்றவரை முயன்றும் பயனில்லாமற் போனது. அவர்கள் கேட்ட மருந்துகளும் அம்மருத்துவமனையில் இல்லை. 1981-ஆம் ஆண்டு சனவரித் திங்கள் 16-ஆம் பக்கல் நள்ளிரவு 1.00 மணியளவில் பாவாணர் இயற்கை யெய்தினார்.

        தேவநேயப்பாவாணர் மறைவிற்குப் பின் சென்னை அண்ணாசாலையிலுள்ள அரசு நடுவண் நூலகத்திற்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. எல்லோருக்கும் அறிவூட்டக் கூடிய நூலகத்திற்குத் தேவநேயப்பாவாணர் பெயர் சூட்டப்பட்டது சாலப் பொருத்தமாகும். அதற்காகத் திரு. ம.கோ.இரா. அவர்களின் மதிநுட்பப் பார்வையைப் பாராட்டாமல் இருக்க முடியாது.