பொன்மொழிகள்

தமிழைத் தாய்மொழியாகக் கொண்டமட்டில் ஒருவன் தமிழனாகான். தமிழ்ப்பற்றுள்ளவனே உண்மைத் தமிழனாவான்.

பிறப்பும் வளர்ப்பும்

        பத்தொன்பதாம் நூற்றாண்டில் தோக்கசு (Stokes) என்னும் வெள்ளைக்காரத் துரைமகனார் ஒருவர் சங்கரநயினார் கோயில், கோவில்பட்டி ஆகிய இடங்களிற் கிறித்துவ சமயத் தொண்டாற்றி வந்துள்ளார். அத்துரைமகனாரின் வளமனைக் காவலராகத் திரு. முத்துசாமித் தேவர் என்பார் பணியாற்றி வந்தார். அவரையும் அவருடைய துணைவியார் வள்ளியம்மாளையும் தோக்கசு துரையார் கிறித்துவராக்கினார். அவர்களின் இருவருக்கும் ஆண் மகவு ஒன்று பிறந்தது. ஆயினும், அக்குழந்தை பிறந்த சின்னாளிலேயே பெற்றோர் இருவரும் அடுத்தடுத்து இறந்து விட்டமையால், அக்குழந்தை மீது இரக்கங் கொண்ட துரையார் அதைத் தாமே எடுத்து அக்குழந்தைக்கு அதன் தந்தையார் பெயரையும் தம்முடைய பெயரையும் இணைத்து ‘ஞானமுத்து தோக்கசு’ என்று பெயரிட்டு வளர்த்து வந்தார். குழந்தை பள்ளியிற் சேர வேண்டிய பருவத்தை எட்டியதும் பள்ளியில் சேர்க்கப்பட்டது. திரு. ஞானமுத்து கல்வியிற் சிறந்து விளங்கியதால், படிப்பு முடிந்தவுடன் இளம் பருவத்திலேயே ஆசிரியப் பணியில் அமர்த்தப்பட்டார். அவருடைய உறவுப் பெண்ணான சொக்கம்மாள் என்ற பெண்மணியை மரியாள் என்று பெயர் மாற்றம் செய்து, திரு. ஞானமுத்துவுக்கு மணமுடித்து வைத்தார் துரைமகனார். ஆனால், அவ்வம்மையாரின் உற்றார் உறவினர் ஈழத்தில் இருந்தமையால், மணமாகிய சிறிது காலத்திற்குள் தம் கணவருடன் இணைந்து வாழ மனமில்லாமல் அவ்வம்மையாரும் ஈழத்திற்கே சென்றுவிட்டார்.

        இதனால், மனவருத்தமுற்ற தோக்கசு துரையார் கோவில்பட்டியை அடுத்த பாண்டவர்மங்கலம் என்னும் கோமதிபுரத்தில் கிறித்துவ சமய ஊழியராகப் பணியாற்றி வந்த குருபாதம் என்பாரின் திருமகளான பரிபூரணம் அம்மையாரை திரு. ஞானமுத்துவுக்கு மறுமணம் செய்து வைத்தார். இல்லறத்தில் மிகுந்த அக்கறை காட்டிய அவ்வம்மையார் தம் கணவருடன் இன்புற்று வாழ்ந்தார். அப்போது ஞானமுத்து சங்கரநயினார் கோயிலிற் கணக்காயராகப் பணியாற்றி வந்தார். அங்கேதான் இன்று உலகம் போற்றும் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் ஆங்கில ஆண்டு 1902, பிப்பிரவரித் திங்கள் 7-ஆம் பக்கல் வெள்ளிக்கிழமையன்று மாலை 6-00 மணியளவில் பிறந்தார். ஞானமுத்து பரிபூரணம் அம்மையார் இருவருக்கும் பிறந்த மக்கள் பதின்மர். பாவாணர் நான்காம் மகனாகவும் கடைசிப் பிள்ளையாகவும் பிறந்தார்.

        பாவாணர் நூல்கள் அனைத்தும் தமிழக அரசால் (தி.மு.க. ஆட்சிக் காலத்தில்) நாட்டுடமையாக்கப்பட்ட பின், ‘தமிழ்மண் பதிப்பகம்’ பாவாணர் நூல்களை மறுபதிப்புச் செய்து வெளியிட்டது. அந்நூல்கள் எல்லாவற்றிலும் முன்னுரையில் பாவாணர் பாட்டனார் முத்துச்சாமித் தேவர் தஞ்சை மாவட்டத்தைச் சேர்ந்தவர் என்று தவறாகக் கூறப்பட்டுள்ளது. அதற்கு எவ்வகைச் சான்றும் கிடையாது. பாவாணர் வாய்மொழியாகவோ அல்லது எழுத்து மூலமாகவோ ஒருபோதும் அவ்வாறு குறிப்பிட்டதேயில்லை.

        இளமைப் பருவத்திலேயே தம் பெற்றோரை இழந்த ஞானமுத்தரைப் போலவே, தேவநேசனும் ஐந்து அகவையாயிருந்தபோது, அவர்தம் தந்தையார் இயற்கை யெய்தினார். சிறிது காலத்திற் தாயார் பரிபூரணம் அம்மையாரும் காலமானார். தேவநேசன் சிறுபிள்ளையாதலால், தக்கார் ஒருவர் பொறுப்பில் வளர வேண்டிய நிலை ஏற்பட்டது. அச்சமயம் அவருடய இரண்டாவது தமக்கையார் திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் தேவநேசனை வளர்க்கும் பொறுப்பைக் கனிவுடன் ஏற்றுக் கொண்டார். அப்போது, திருவாட்டி பாக்கியத்தாய் அம்மையார் வடார்க்காடு மாவட்டம் ஆம்பூரில் குடியிருந்ததால், தேவநேசனை அங்குள்ள கிருத்துவ நடுநிலைப்பள்ளி யொன்றில் சேர்த்தார்.