பொன்மொழிகள்

இந்தியாவில் ஆங்கிலராட்சி நீக்கத்திற்குப் பாடியவர் சுப்பிரமணிய பாரதியார்; தமிழகத்தில் ஆரியராட்சி நீக்கத்திற்குப் பாடியவர் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனார்.

மலேசியப் பெண்மணியின் கூற்று


        உலகில் மிகவும் போற்றத்தக்க தமிழ் அறிஞர்களில் மொழிஞாயிறு ஞா. தேவநேயப் பாவாணரும் ஒருவர், இது தமிழர்கள் அறிந்த, அறியவேண்டிய உண்மை. அவருக்காக மலேசியத் தமிழ் நெறிக்கழகம் “தெலுக் பங்லீமா காராங்” கிளை திருக்குறள் வகுப்பில், பாவாணர் 111-ஆம் பிறந்தநாள் விழா, அவருக்குச் சிறப்பு செய்யும் வகையில் நிகழ்த்தப்பட்டது. தமிழுக்காக அவர் செய்த தொண்டுதனையும் அவருடைய வாழ்க்கை வரலாற்றைப் பற்றியும் மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவர் தமிழ்த்திரு. திருமாவளவன் அவர்களால் கூறப்பட்டது. தனது மனைவிக்கு உடல்நிலை பாதிக்கப் பட்டபோது, தன்னிடம் மருத்துவச் செலவுக்குக் கூடப் பணமில்லாமல் வேதனைப் பட்டார். பணம் இருந்திருந்தால், என்மனைவியை நான் காப்பாற்றி இருப்பேனே என்று கலங்கிய நிலையை எண்ணும்போது, மிகவும் வேதனையாக இருந்தது. மேலும், அவரது உரையில் பாவாணர் வாழ்கையில் ஏற்பட்ட துன்பங்களைக் கூறுகையில் எங்கள் கண்களும் கலங்கின. தமிழுக்காகத் தன்னையே ஈகம் செய்த ஒரு மாபெரும் அறிஞரைத் தமிழர்கள் பலர் ஆதரிக்காமல் அவருடைய பேச்சைப் புறக்கணித்து விட்டார்கள். பணத்திற்காகவும் பதவிக்காகவும் பல மனிதர்களை இவ்வுலகில் காணலாம். ஆனால், மொழிக்காகத் தனது வாழ் நாளையே அர்ப்பணித்துக்கொண்ட ஒரு பேரறிஞரை நினைக்கும்போது, நாமெல்லாம் மொழிக்காக என்ன செய்தோம். இனி என்ன செய்யப் போகிறோமெனத் தோன்றுகிறது. ஏழ்மை நிலையில் இருக்கும் ஒருமனிதனுக்கு எவ்வளவு திறமைகள் இருந்தாலும், அது அடிபட்டுப் போகிறது. இவ்வுலகில் மனிதர்கள் அதிகம், ஆனால், மனிதனாக வாழ்பவர்கள் மிக மிகக் குறைவு. ஒவ்வொரு மனிதனும் சிந்திக்க வேண்டும். அந்தச் சிந்தனை தனது மொழி, இன நலத்திற்காகச் சிறிதளவாவது இருக்க வேண்டுமென வேண்டி விடை பெறுகிறேன். எங்களால் இயன்ற அளவு பாவாணரின் நினைவாகச் சில செய்திகளைப் படித்திருக்கிறோம். இது மேலும் தொடரும். வணக்கம்.
அஞ்சலி கதிரவன்
(மலேசியத் தமிழ் நெறிக்கழகம் தெலுக் பங்லீமா காராங் கிளை)