பொன்மொழிகள்

இந்தியாவில் ஆங்கிலராட்சி நீக்கத்திற்குப் பாடியவர் சுப்பிரமணிய பாரதியார்; தமிழகத்தில் ஆரியராட்சி நீக்கத்திற்குப் பாடியவர் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனார்.

பாவாணரைப் பறைசாற்றிய பெருமக்கள்

* திருமிகு இரா. முத்துக்குமாரசாமி அவர்கள்

        சைவ சித்தாந்த நூற்பதிப்புக் கழக மேனாள் ஆட்சியாளர் தாமரைத்திரு. வ. சுப்பையாப்பிள்ளை அவர்கள் பாவாணர் தமது வாழ்க்கையில் முன்னேற உறுதுணையாக இருந்தது போலவே, அவரது மறைவுக்குப் பின் இன்றைய ஆட்சியாளர் திருமிகு இரா. முத்துக்குமாரசாமி அவர்களும் கழகம் வெளியிட்ட பாவாணர் நூல்களை யெல்லாம் மறுபதிப்பு செய்து, பாவாணர் கருத்துக்கள் தமிழகமெங்கும் பரவச் செய்த பெருமைக்குரியவராவார்.

        குறிப்பாகப் பாவாணர் நூல்களை யெல்லாம் 1996-ஆம் ஆண்டு தமிழக அரசு நாட்டுடமையாக்க முன்வந்தபோது, உலகெங்குமுள்ள தமிழன்பர்கள் யாவரும் அவற்றால் பயன்பெற வேண்டுமென்ற் ஒரே நோக்கத்தோடு எத்தகைய எதிர்பார்ப்புமின்றி இன்முகத்தோடு ஒத்துழைப்பு நல்கியதற்குத் திருமிகு முத்துக்குமாரசாமி அவர்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது.

* பாவலரேறு பெருஞ்சித்திரனார் அவர்கள்

        சேலம் கல்லூரியில் எனது தந்தையாரான மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களிடம் மாணவராகப் பயின்ற பாவலரேறு பெருஞ்சித்திரனார், பாவாணர் தனித்தமிழ்க் கொள்கையால் ஈர்க்கப்பட்டு, பாவாணர்க்கு மிகவும் உறுதுணையாக இருந்தவர்.

        'தென்மொழி' என்னும் தனித்தமிழ் இதழைத் தொடங்கி, அதன் வாயிலாகப் பாவாணர் கொள்கைகளை உலகிற் பரவச்செய்த பெருமை இவருக்கு உண்டு. குறிப்பாகப் பாவாணர் மிகவும் நலிந்திருந்த காலத்தில் பாவாணர்மீது அக்கறை கொண்டு அவர்க்கு உதவு வகையில் ‘தென்மொழி’ இதழ் வாயிலாகச் ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டம்’ என்னும் ஒரு சிறப்பான திட்டத்தை அறிமுகப்படுத்தி பாவாணர்க்குத் தக்க சமயத்தில் உதவிய பெருமை இவரையேச் சாரும்.

* புலவர் இரா. இளங்குமரனார் அவர்கள்

        புலவர் இளங்குமரனார் அவர்கள் பாவாணருடன் நெருங்கிய தொடர்பு கொண்டிருந்த்தோடு, அவர் வழியில் தனித்தமிழ்க் கொள்கையில் முனைப்பாக ஈடுபாடு கொண்டு இலக்கியப் பணிகளைச் செய்து வருபவர்.

        பாவாணர் மீது மட்டற்ற மதிப்புரவும் அன்பும் கொண்டிருந்த இவர், பாவாணர் மறைவுக்குப் பின்னும், முதுகலை, முனைவர் பட்டப்படிப்பு பயிலுவோர் பயன்பெறும் வகையில், ‘பாவாணர் ஆராய்ச்சி நூலகம்’ ஒன்றைச் சொந்தச் செலவில் திருச்சியில் தமது இல்லத்திலேயே அமைத்துப் பாவாணர் பெயரும் புகழும் சிறக்கச் செய்த பெருமைக்குரியவராவார்.

        பாவாணர் காலத்தில் ‘செந்தமிழ்ச் சொற்பிறப்பியல் அகரமுதலித் திட்டத்’தில் சிறிது காலம் பணியாற்றி வந்த்தோடு செல்லுமிடமெங்கும் பாவாணர் பெருமையைப் பறைசாற்றி வருபவர்.

        பாவாணர் காலத்திற்குப்பின் தமிழகத்தில் பல இடங்களிற் சுற்றி அலைந்து பாவாணர் தொடர்பான செய்திகளைத் தொகுத்துப் ‘பாவாணர் வரலாறு’ எனும் நூலை எழுதி வெளியிட்ட பெருமை இவரையேச் சாரும். மேநிலைப் பள்ளிப் பாடப் புத்தகத்திலும் பாவாணர் பொருள் பற்றி யெழுதி இடம்பெறச் செய்துள்ளது பாராட்டுக்குரிய செய்தியாகும்.

* திருமிகு கோவலங்கண்ணனார் அவர்கள்

        அண்மையில் காலமான திருமிகு கோவலங்கண்ணனார் தமது சிறு வயது முதலே சிங்கையில் வாழ்ந்தாலும், மிகுந்த தமிழ்ப்பற்றும் தமிழ்நாட்டுப்பற்றும் கொண்டிருந்தார். பாவாணர்பால் அளவற்ற அன்பும் மதிப்பும் கொண்டிருந்த இவர், பாவாணர் எழுதிய ‘தமிழிலக்கிய வரலாறு’ என்னும் நூல் அச்சிடுவதற்குப் பொருளுதவி செய்தவர். நான் எழுதிய ‘பாவாணர் நினைவலைகள்’ (பாவாணர் வாழ்க்கை வரலாறு) என்னும் நூல் அச்சிட்டு வெளியிடுவதற்கு 2,00,000/- உருபா (ஈரிலக்கம்) கொடுத்து உதவியவர்.

        பாவாணர் வழியில் தனித்தமிழ்க் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்ததோடு, கோபாலக்கிருட்டிணர் என்ற தமது இயற்பெயரைக் கோவலங்கண்ணன் என்று மாற்றி வைத்துக் கொண்டார்.

* புலவர் ஆ. நெடுஞ்சேரலாதன் அவர்கள்

        புலவர் நெடுஞ்சேரலாதன் அவர்கள் பாவாணர் பிறந்த மண்ணாகிய சங்கரநயினார் கோவிலையடுத்த ஊரைச் சேர்ந்தவரானதாலும் தமிழ்ப் பற்றும், பகுத்தறிவு, குமுகாய வளர்ச்சி ஆகிய உணர்வுகளைக் கொண்டவரானதாலும் பாவாணர்மீது மிகுந்த பற்றும் மதிப்புரவும் கொண்டு, அவர் புகழ் நாடெங்கும் பரவ வேண்டும் என்ற உயரிய நோக்கத்தோடு, தம்முடைய அரும்பெரும் முயற்சியால் பலரிடம் நன்கொடைகள் பெற்று, பாவாணர் முதன்முதலாகப் பணியாற்றிய (ஆசிரியப் பணி) இராசப்பாளையத்தை யடுத்த சீயோன் மலையில் 3.75 இலக்கம் உருபா செலவில் ‘பாவாணர் கோட்டம்’ என்னும் நினைவிடத்தை அமைத்து, அங்குப் பாவாணர் முழுவுருவச் சிலையையும் படிப்பகம் ஒன்றையும் நிறுவியுள்ளார்.

        இவருடைய பாவாணர் தொண்டும் தமிழ்ப் பணியும் இத்துடன் நின்றுவிடாமல் இன்றுவரை தொடர்ந்து நடைபெற்று வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. ஆண்டுதோறும் பாவாணர் பிறந்தநாள் விழாவைப் பாவாணர் கோட்டத்தின் சார்பாகக் கொண்டாட ஏற்பாடு செய்து வருகிறார். மேலும், பல்வேறு இடங்களில் தமிழ் வளர்ச்சி மன்றங்கள் அமைத்தல், தமிழ்ச் சான்றோர் கலந்து கொள்ளும் சிறப்புக் கூட்டங்கள் நடத்துதல் போன்ற பணிகள் மிகவும் சிறப்பாக நடைபெற்று வருகின்றன.

        பாவாணரைப் பறைசாற்றும் நோக்குடன் 'பாவாணரியல்' என்னும் பரப்புரைப் பனுவல் இவரால் வெளியிடப்பட்டு வருவது மிகவும் போற்றுதற்குரியது.

* தமிழ்த்திரு இரா. திருமாவளவன் அவர்கள்

        மலேசியத் தமிழ்நெறிக் கழகத் தேசியத் தலைவரான திருமிகு திருமாவளவன் அவர்கள் மலேசியத் தமிழரிடையே மட்டுமல்லாமல் உலகெங்கும் பாவாணர் புகழும் அவர்தம் தனித்தமிழ்க் கொள்கைகளும் பரவ முனைப்பாகச் செயல்பட்டு வருபவர்.

        மலேசியத் தமிழர்கள் பாவாணரை அறிந்து கொள்ளும் வகையில் பாவாணரைப் பற்றி நூல்களும் எழுதியுள்ளார். ஆண்டுதோறும் பாவாணர் பிறந்தநாளை மலேசியத் தலைநகரான கொலாலம்பூரில் சிறப்பாகக் கொண்டாடவும் குறிப்பாகச் சிறுவர்கள் பாவாணரை அறிந்து கொள்ளும் வகையில் அவர்களுக்குப் போட்டிகள் நடத்துவதிலும் மிகுந்த ஆர்வம் கொண்டுள்ளவர் இவர் என்றால் அது மிகையல்ல. தமது பெருமுயற்சியால் மலேசிய அரசு பாவாணர்க்குச் சிறப்பு அஞ்சல்தலை வெளியிட ஏற்பாடு செய்த பெருமை இவரைச் சாரும்.

* முனைவர் அரணமுறுவல் அவர்கள்

        முனைவர் அரணமுறுவல் அவர்கள் தமது இளம் வயது முதலே பாவாணரின் தனித்தமிழ்க் கொள்கையைப் பின்பற்றி வாழ்ந்து வருபவர்.

        குறிப்பாகப் பாவாணர் மறைவுக்குப்பின் அவர் தொடங்கிய உலகத்தமிழ்க் கழகத்தை மீண்டும் எழுச்சியடைச் செய்து அதன் வாயிலாகப் பாவாணர் தனித்தமிழ்க் கொள்கைகளை உலகிற்குப் பறைசாற்றி வருபவர். அதுபோன்றே, பாவாணரால் தொடங்கப்பட்ட 'முதன்மொழி' என்னும் இதழையும் புத்துயிர் பெறச் செய்து அதன்மூலம் பாவாணர் புகழ் ஓங்கச் செய்து வருகின்றார் என்றால் அது மிகையாகாது.

* திருமிகு கு. பாலசுப்பிரமணி அவர்கள்

        திருமிகு பாலசுப்பிரமணி அவர்கள் பாவாணர் மீது மிகுந்த பற்றும் மதிப்புரவும் கொண்டுள்ளவர் என்று சொன்னால் அது மிகையாகாது.

        பாவாணர் நூல்களைத் தமிழக அரசு நாட்டுடமை ஆக்கியதிலும், நடுவண் அரசு பாவாணர்க்குச் சிறப்பு அஞ்சல்தலை வெளியிட்டதிலும் பெரும் பங்கு இவருக்கு உண்டு. நான் எழுதிய ‘பாவாணர் நினைவலைகள்’ என்னும் பாவாணர் வாழ்க்கை வரலாற்று நூலில் உள்ள ஆங்கிலப் பகுதிகளைத் தமிழாக்கம் செய்த பெருமை இவரைச் சாரும்.

* திருமிகு. அன்புவாணன் வெற்றிச்செல்வி

        திரு. அன்புவாணன் வெற்றிச்செல்வி அவர்கள் நெய்வேலியில் அஞ்சலகத் தலைவராகப் பணியாற்றிய காலத்தே திரு. அறவாழி போன்ற பல தனித்தமிழ்ப் பற்றுள்ள குடும்பங்களை ஒன்றாக இணைத்து, ‘பாவாணர் தமிழ்க் குடும்பம்’ என்னும் ஓர் அமைப்பை உருவாக்கிய பெருமைக்குரியவராவார்.

        ‘பாவாணர் தமிழ்க் குடும்பம்’ என்ற் அமைப்பின் செயலாளராக இருந்த இவர், அந்த அமைப்பின் வாயிலாகப் பாவாணரின் தனித்தமிழ்க் கொள்கைகளை முனைப்பாகக் கைக்கொண்டும் மக்களிடையே பரவச் செய்தும் வந்தவர். இவர் உருவாக்கிய ‘பாவாணர் தமிழ்க் குடும்பம்’ என்ற அமைப்பின் வாயிலாக 10-4-1976 அன்று தமிழர் அறக்கட்டளை ஒன்றும் நிறுவி, அதன் மூலமாகத் திருக்குறள் வகுப்பு, தனித்தமிழ்ப் பயிற்சி ஆகிய நற்பணிகளில் ஈடுபட்டிருந்தது போற்றத்தக்கதாகும்.

        பாவாணர் குரல் இந்தப் பார் எங்கும் ஒலித்துக் கொண்டிருக்கும் வகையில் அவரது நேர் உரையை ஒலிப்பதிவு செய்து வழங்கிய பெருமை இவரையேச் சாரும்.