பொன்மொழிகள்

இந்தியாவில் ஆங்கிலராட்சி நீக்கத்திற்குப் பாடியவர் சுப்பிரமணிய பாரதியார்; தமிழகத்தில் ஆரியராட்சி நீக்கத்திற்குப் பாடியவர் புரட்சிப் பாவேந்தர் பாரதிதாசனார்.

பாவாணர் இயல்புகள்

* பாவாணர் தம்மைவிடப் பெரியவர்களைப் பார்க்கச் செல்லும் போதும், சிறு பிள்ளைகள் இருக்கும் இடத்திற்குச் செல்லும் போதும் வெறுங்கையுடன் செல்ல மாட்டார். அவர்களுக்கு ஏற்றதை வாங்கிக் கொண்டுதான் செல்வார்.

* பாவாணர் உண்மையை எவரிடமும் எடுத்துக் கூறச் சிறிதும் அஞ்ச மாட்டார்.

* பாவாணர் பிறரிடம் கடன் வாங்குவதை அடியோடு வெறுப்பவர். தம்முடைய வருமானத்திற்கு மேல் செலவு செய்ய மாட்டார். தமக்குத் தேவையான பொருட்கள் அனைத்தையும் தாமே வாங்கி வைத்திருப்பார்.

* எங்குச் சென்றாலும் குறித்த நேரத்திற்குள் செல்ல வேண்டும் என்பதே பாவாணர் குறிக்கோள். கூடுமான வரை குறித்த காலத்திற்கு முன்பே சென்று விடுவது அவர் வழக்கம்.

* பாவாணர் என்றும் சொன்ன சொல் தவற மாட்டார். அதனால் தமக்கு இழப்பு ஏற்பட்டாலும் அதைப்பற்றிக் கவலைப்பட மாட்டார்.

* பாவாணர் ஆங்கில மொழியில் மிகுந்த புலமை பெற்றிருந்த போதிலும், எப்போதும் தமிழ் மொழியிலேயே பேச விரும்புவார். குறிப்பாகத் தனித்தமிழில்தான் பேசுவார். தமிழ் அறவே தெரியாதவரிடம்தான் ஆங்கிலத்தில் பேசுவார்.

* பாவாணர் எந்தவொரு வீட்டிலும் வாடகைக்குக் குடி புகுந்த சின்னாளிலே, அங்குச் சிறிய அளவில் காய்கறித் தோட்டம் ஒன்றை உருவாக்கி விடுவார். மாலை நேரங்களில் அதில் வேலை செய்வது அவருக்குப் பொழுதுபோக்கு. பாவாணர் தமது வாழ்க்கையின் இறுதிவரை வாடகை வீட்டிலேயே குடியிருக்க நேர்ந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

* தொடர்வண்டியில் செல்வதானாலும் பேரியங்கியில் செல்வதானாலும் சரியான சில்லரையைக் கொண்டு செல்வதே பாவாணர் வழக்கம்.

* பிறர் செய்த நன்றியை ஒருபோதும் மறவார் பாவாணர். பிறர் செய்த செயலுக்கு நன்றிக் கடனாகத் தாமும் செய்யவே விரும்புவார்.

* பாவாணர் பணியிலிருந்த காலத்திலும் ஓய்வு பெற்ற நிலையில் இருந்தபோதும் பொதுவாக இரவு 12.00 மணிவரைத் தமது ஆய்வுப் பணியில் ஈடுபட்டிருப்பார். காலை 5.00 மணிக்கெல்லாம் எழுந்து விடுவார்.

* வழக்கமாகப் பணிக்குச் செல்வதாக இருந்தாலும் வெளியிற் செல்வதானுலமே பாவாணர் முகமழிப்பு (shaving) செய்து கொள்வார். இன்றேல், அவ்வேளையிலும் தமது ஆய்வுப் பணியிலேயே ஈடுபட்டிருப்பார்.

* "உண்ட மயக்கம் தொண்டனுக்கும் உண்டு" என்பது முதுமொழி. ஆனால், பாவாணரோ அதற்கு விலக்கு என்றுதான் சொல்ல வேண்டும். பாவாணர்க்குப் பகலில் உறங்கும் வழக்கம் கிடையாது. அவர் ஓய்வெடுக்க விரும்பினால், அகராதிகளையும் கலைகளஞ்சியத்தையும் புரட்டிப் பார்த்துக் கொண்டிருப்பார். அதுதான் அவர்க்கு ஓய்வு. பெரும்பாலான அகராதிகளைப் பாவாணர் தம் சொந்த செலவிலேயே வாங்கி வைத்திருந்தார்.


* சிறியோராக இருந்தாலும் பெரியோராக இருந்தாலும், பாவாணரிடம் ஐயம் ஏதும் கேட்டால், ஐயம் முற்றிலும் தீரும்வரைப் பொறுமையுடன் விளக்கிச் சொல்வது அவர்க்குரிய தனிச்சிறப்பு.

* பல வேளைகளிற் பாவாணர் நாற்காலியில் அமர்ந்தபடியே தமது கண்களை மூடிக்கொண்டிருப்பார். பார்ப்போருக்கு அவர் உறங்குவதுபோல் தோன்றும். ஆனால், அது உறக்கமன்று; ஆழ்ந்த சிந்தனையே.

* பிறர் தமது காலில் விழுவதைப் பாவாணர் ஒருபோதும் விரும்ப மாட்டார். மாந்தன் இன்னொரு மாந்தன் காலில் விழுவதைத் தன்மானக் கேடு என்றே சொல்வார்.

* பாவாணர் தமது தோட்டத்தில் விளைந்த காய்கறிகளையோ கனிகளையோ அக்கம்பக்கத்தில் உள்ளோர்க்கும் கொடுத்து மகிழ்வார்.

* பாவாணர்க்கு வேலை நாள் ஓய்வு நாள் என்பதே கிடையாது. தமது வாழ்நாள் முழுதும் ஆய்வுப் பணியிலேயே ஈடுபட்டிருந்தார். தமக்கு வேண்டிய நூல்கள் அனைத்தையும் சொந்த செலவிலேயே தமது இல்லத்தில் வாங்கி வைத்திருந்தார்.

* பாவாணர் பணம், பதவி, பட்டம் ஆகியவற்றை ஒருபோதும் விரும்பாதவர். தமிழன் முன்னேற்றம் ஒன்றே அவரது குறிக்கோள்.

* பாவாணர் ஆசிரியப் பணியை மிகவும் உயர்வாக மதிப்பவர்.

* பாவாணர் பிராமணர்க்கு எதிரியென ஒரு சாரார் தவறாக எண்ணிக் கொண்டிருக்கின்றனர். உண்மையில் பாவாணர் பிராமணக் கொள்கைகளைத்தான் எதிர்த்தாரே தவிர, பிராமணர்களை அவர் ஒருபோதும் எதிர்த்தது இல்லை. எத்தனையோ பிராமணர்களை அவர் பெருமையாகப் பேசியும் பாராட்டியும் உள்ளார். அதுபோன்றே, எத்தனையோ பிராமணர்களும் பாவாணரை மதித்தும் அவர் கொள்கைகளைக் கைக்கொண்டும் வந்துள்ளனர்.

* எவரிடமிருந்தும் பாவாணர்க்குத் திருமண அழைப்பு வந்தால், உடனே ஓர் அஞ்சலட்டையில் மணமக்கட்கு ஒரு வெண்பா (வாழ்த்துப்பா) இசைத்தனுப்பி விடுவார்.