பொன்மொழிகள்

ஆரியர் வருமுன் தமிழ் இயற்கையாக எப்படி வழங்கினதோ அப்படி வழங்குவதே தனித்தமிழ். அது உலக முதன் மொழியாதலால், பிற்காலப் பிறமொழிகளில் எழுந்த வல்லொலிகள் பல அதிலில்லை. அவை அதற்குத் தேவையல்ல.

தனிப்பட்ட வாழ்க்கை

        பாவாணர் பொது நோக்கு கொண்டவராகவும், குலமத வேறுபாடின்றித் தமிழுக்காகவும், தமிழன் முன்னேற்றத்திற்காகவும் தம்மை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்டு வாழ்ந்தபோதிலும், தமது தனிப்பட்ட வாழ்க்கையில் கிறித்துவ சமயத்தைத் தழுவியே வாழ்ந்தார்.

        அவர் தமது குடும்ப வாழ்க்கையில் கிறித்துவச் சமய பழக்க வழக்கங்களையே கடைபிடித்து வந்தார். பெற்றோர் கிறித்துவ சமயத்தைச் சேர்ந்தவர்களாயிருந்ததால், பாவாணரும் கிறித்துவராகவேதான் வாழ்ந்தார். பாவாணருடைய திருமணமும் அவர்தம் பிள்ளைகள் திருமணங்களும் கிறித்துவ சமயப்படியே நடைபெற்றன. அவர்தம் இளமைப் பருவத்தில் சிலைத் (மார்கழி) திங்கள் விடியற்காலை கிறித்துவ சமயப்பற்றாளர்களுடன் இணைந்து சமயப் பாடல்களைப் (பஜனை) பாடிச் சென்றிருக்கிறார். அவர் நாள்தோறும் விவிலியத்தைப் (Bible) படிப்பதுண்டு. பாவாணர் தமது ஆராய்ச்சிப் பணியின் கரணியமாக ஒவ்வொரு ஞாயிறும் கிறித்துவ ஆலயத்திற்குச் செல்லாவிட்டாலும், பண்டிகை நாட்களில் தவறாமல் ஆலயத்திற்குச் செல்வது வழக்கம். ‘கிறித்துவக் கீர்த்தனம்’ என்னும் பாடல் நூலையும் பாவாணர் எழுதி வெளியிட்டுள்ளார்.