பொன்மொழிகள்

தமிழன் என்னும் இனம் தமிழ் பற்றியதே யாதலால்,தமிழ் தோன்றிய இடமே தமிழன் பிறந்தகமாம்.அது தென்மாவாரியில் மூழ்கிப்போன குமரிநாடே ஆகும்.

ஆரியர் வருகைக்கு முற்பட்ட முதலிரு கழகத் தனித்தமிழ் நூல்கள் அனைத்தும் அழிக்கப்பட்டு விட்டன. இன்றிருப்பவை யெல்லாம் மறுவிளைச்சல் (after - growth) போன்றவையே.

தமிழ்நாடு, வரலாற்றாலும் மக்களாலும் உணர்ச்சியாலும் கொள்கையாலும் மொழியாலும் இலக்கியத்தாலும் பிற நாடுகளிலும் வேறுபட்டதாகும். இதுவே தமிழ்நாட்டின் தனித்தன்மை.

தேவநேயப் பாவாணர்

an image

    “ஓங்க லிடைவந் துயர்ந்தோர் தொழவிளங்கி
    யேங்கொலிநீர் ஞாலத் திருளகற்றும் – ஆங்கவற்றுள்
    மின்னேர் தனியாழி வெங்கதிரொன் றேனையது
    தன்னே ரிலாத தமிழ்.”

எனது தந்தையார் மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்கள் பற்றிய செய்திகளையும் அவரது வாழ்க்கை வரலாற்றினையும் இணையத்தளத்தில் வெளியிட வேண்டுமென்ற ஆவல் நீண்ட காலமாக என் உள்ளத்தில் இருந்து வந்த போதிலும் தற்போதுதான் அதற்கான சூழல் ஏற்பட்டுள்ளது. இந்த வாய்ப்பு எனக்குக் கிட்டியதற்கு நான் பெருமகிழ்ச்சி யடைகிறேன்; பெருமையும் கொள்கிறேன்.

        இந்த இணையத்தளத்தில் பாவாணரின் வாழ்க்கை வரலாற்றுச் சுருக்கம், அவர் தமது வாழ்க்கையிற் கையாண்டு வந்த தமிழ்ச் சொற்கள், அவரது பல்வேறு தோற்றப் படங்கள், சிறப்பாக அவருடைய நேர்வுரை (பாவாணரின் சொந்தக் குரலொலியில்) ஆகியவை இடம் பெற்றுள்ளன. இவையெல்லாம் உலகளவில் பலருக்கும் குறிப்பாக ஆய்வு செய்வோர்க்கும் நன்றாகப் பயனளிக்கும் என்று நான் பெரிதும் நம்புகிறேன்.

        மொழிஞாயிறு தேவநேயப் பாவாணர் அவர்களின் பெயரனும், எனது மகனுமாகிய திரு. இம்மானுவேல் தேவநேயன் இந்த வலைத்தளத்தைச் சிறப்பாக வடிவமைத்துக் கொடுத்துள்ளமைக்கு நான் பெரு மகிழ்ச்சியடைகிறேன். அவர்க்கு என்னுடைய பாராட்டுக்களையும் நல்வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

        இம்பெரு முயற்சியில் எனக்கு ஒத்துழைப்பு நல்கிய புலவர் இறைக்குருவனார், திரு. அன்புவாணன் வெற்றிச்செல்வி, எனது நண்பர் திரு. பெரியார் சாக்ரடீசு ஆகியோருக்கு எனது உளமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

        பாவாணரையும் அவரது புலமையையும் நன்கு அறியாத ஒரு சிலர் அவரைப் பற்றித் தவறான கருத்துக்களைக் கொண்டிருக்கலாம். அதைப்பற்றி நாம் கவலை கொள்ளத் தேவையில்லை. பாவாணரின் புலமையும் அவரது தன்னலமற்ற தொண்டும் அவரை அறிந்தோர்க்கு நன்கு விளங்கும்.

        பாவாணரின் விரிவான வாழ்க்கை வரலாற்றினை அறிய விரும்புவோர் நான் எழுதியுள்ள ‘பாவாணர் நினைவலைகள்’ என்னும் நூல் வாயிலாகத் தெரிந்து கொள்ளலாம்.

அன்புள்ள,

தே. மணி,

“பாவாணர் இல்லம்”

சென்னை - 600078

தொ. பே: 044-23660390